நீதி நெறி விளக்கம்
ந.சி. கந்தையா
1. நீதி நெறி விளக்கம்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. நீதி நெறி விளக்கம்
நீதி நெறி விளக்கம்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : நீதி நெறி விளக்கம்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
நீதி நெறி விளக்கம்
மூலமும் உரையும்
ஆங்கில மொழி பெயர்ப்பும்
முன்னுரை
பிற்கால நூல்களுள் நீதிநெறி விளக்கம் சொல் நடை பொருட் செறிவு முதலியவைகளால் சிறப்பமைந்தது. அக் காலத்தில் மதுரையை ஆண்ட திருமலை நாயகன் (1623-1659) என்னும் அரசனின் வேண்டு கோளுக்கு இசைந்து குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்னும் நூலைத் திருக்குறளின் சாரமாகச் செய்தாரென்பது பரம்பரை வரலாறு. மேலை நாடுகளினின்றும் கிறித்துவ மதத்தைப் பரப்பும் பொருட்டு இந்திய நாடு போந்தார் தமது கொள்கைகளைப் பரப்பும் பொருட்டு மக்கள் பேசும் மொழிகளைப் பயிலும் கட்டாயம் உண்டாயிருந்தது. தமிழைப் பயிலத் தொடங்கிய மேல் நாட்டவர் தமிழில் உள்ள திருக்குறள் என்னும் ஒப்புயர் வில்லாத நூலைக் கண்டு வியப்படைந்து அதனைக் கற்று அதனைத் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்துக்கொண்டனர். திருக்குறளை ஒப்ப மேல்நாட்டவரின் கவனத்தை ஈர்த்த இன்னொரு நூல் நீதிநெறி விளக்கம். இந் நூலை ஸ்டோக்ஸ் (H. Stokes, I.C.S) 1830இல் அச்சேற்றி வெளியிட் டுள்ளார். வேறு பலர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இப் பதிப்பு புதிய தெள்ளிய உரையோடும் ஆங்கில மொழிபெயர்ப்போடும் கூடியது.
குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் என்னும் அரிய நீதி நூலை அருளிச் செய்த குமரகுருபர சுவாமிகள் 1675ஆம் ஆண்டு (சிறீ வைகுந்தத்திற் பிறந்தார். பிறந்து ஐந்து ஆண்டளவும் இவர் ஊமை யாயிருந்தார். பின்பு இவர் பேசும் வன்மை அடைந்தார். இவர் தென்னிந்தியாவிற் பல இடங்களுக்குத் தல யாத்திரை செய்த பின் 1658இல் காசிக்குச் சென்றார். அங்கு இவர் முகமதிய அரசனால் நன்கு மதிக்கப்பட்டு அவனால் அளிக்கப்பட்ட நிலத்தில் மடம் ஒன்றைக் கட்டினார். 1988இல் இவர் காலமானார். இவருடைய பாடல்கள் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியவை. இவர் செய்த நூல்கள் 1. கந்தர் கலிவெண்பா, 2. மீனாட்சி பிள்ளைத் தமிழ், 3. மீனாட்சி குறம், 4. மீனாட்சி இரட்டை மணிமாலை, 5. பண்டார மும்மணிக் கோவை, 6. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், 7. சிதம்பர மும்மணிக் கோவை, 8. நீதிநெறி விளக்கம், 9. மதுரைக் கலம்பகம், 10. காசிக் கலம்பகம், 11. சிதம்பரச் செய்யுட் கோவை என்பனவாம்.
சென்னை
1.4.1949
ந.சி. கந்தையா
நீதி நெறி விளக்கம்
மூலமும் உரையும்
ஆங்கில மொழிபெயர்ப்பும்
கடவுள் வாழ்த்து
நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று. 1
1. Youth is a bubble on the water: riches in full abundance are the long waves that roll on the water; the body is a writing on the water. Why, O my friends, worship we not the Court of our God?
(பதவுரை) இளமை நீரில் குமிழி - இளமைப் பருவம் நீரில் குமிழி போன்று நிலை இல்லாதது; நிறை செல்வம் நீரில் சுருட்டு நெடும் திரைகள் - நிறைந்த செல்வம் (கடல்) நீரிலே சுருண்டு வருகின்ற நீண்ட அலைகள் போன்று தோன்றி மறைவது; யாக்கை நீரில் எழுத்தாகும் - உடம்பு தண்ணீரில் எழுதிய எழுத்துப் போல் விரைவில் மறைந்து போவது; (ஆதலின்) நமரங்காள் - நம்மவரே! எம்பிரான் மன்று வழுத்தாதது என் - எமது கடவுளின் சபையைத் துதியாதது ஏனோ?
(கருத்துரை) உடம்பு நிலையற்றது. ஆதலால் அது நிலைத் திருக்கும் போதே கடவுளை வழிபடல் வேண்டும்.
கல்வியே உறுதியான துணை
அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை. 2
2. It will bestow virtue, riches, pleasure and Heaven. It will establish a good report in the world, and when any great affliction may betide, it will afford a hand; short-lived mortals have no surer stay than learning.
(ப-உ) (கல்வி) அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - (கல்வி) அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் வீடு பேற்றையும் கொடுக்கும்; புறம் கடை நல் இசையும் நாட்டும் - உலகில் நல்ல புகழையும் நிலை நிறுத்தும்; உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் - பெரிய துன்பம் ஒன்று நேர்ந்தவிடத்தும் துணை செய்யும்; (ஆதலின்) சிறு உயிர்க்கு உற்ற துணை கல்வியின் ஊங்கு இல்லை - ஆகவே சிறிய வாழ்நாளுடைய மக்களுக்கு உறுதியாகிய துணை கல்வியிலும் மேலாக வேறொன்றில்லை.
புறங்கடை - புறத்தே.
(க-உ) கல்வி மக்களுக்கு எல்லாப் பயனும் கொடுத்து உதவத்தக்கது. ஆதலால் அதனைக் கற்றல் வேண்டும்.
கல்வி கற்பது துன்பமாயினும் அது பின் இன்பந்தரும்
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது. 3
3. O thou adoned with perfect jewels! Learning at first painful, will afterwards afford pleasure. It will destroy ignorance and extend knowledge. But the pain, which succeeds to the short-lived pleasure of immoderate lust,is great.
(ப-உ) முற்று இழாய் - முற்றாக முடிந்த வேலைப்பாடுகளுடைய நகைகளை அணிந்தவனே; மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி - அறியாமையைக் கெடுத்து அறிவை விசாலப்படுத்தும் கல்வி; தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும் - கற்கத் தொடங்கும் போது துன்பம் தருவதாகிப் பின்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; நெடும் காமம் - மிகுந்த காமம்; முற்பயக்கும் சின்நீர இன்பத்தில் பிற்பயக்கும் பிழை பெரிது - முதலில் கொடுக்கும் சிறிது நேர இன்பத்திலும் பார்க்கப் பின்பு கொடுக்கும் துன்பம் பெரிதாகும்.
(க-உ) கல்வி தொடக்கத்தில் துன்பமாகத் தோன்றிப்பின் இன்பந் தரும்; காமம் முதலில் இன்பமாகத் தோன்றிப்பின் துன்பந்தரும்.
சபையை அலங்கரிக்கும் கல்வி
கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ்
செல்வமு முண்டு சிலர்க்கு. 4
4. Blest with learning as a chaste spouse, with sweet poctry as the darling son of that spouse, and with fluency of language as a store of riches, there are some whose wealth adorns the illustrious assembly of the learned.
(ப-உ) சிலர்க்கு கல்வியே கற்புடைப் பெண்டிர் (ஆ) - கல்வி கற்கும் சிலர்க்குக் கல்வியே கற்புடைய மனைவியாகவும்; அப்பெண்டிர்க்குத் தீம் கவியே செல்வப் புதல்வன் ஆ - அம் மனைவிக்கு இனிய பாடலே செல்வப் புதல்வனாகவும்; சொல்வளம் மல்லல் வெறுக்கை ஆ - சொல்லும் திறமையே நிறைந்த செல்வமாகவும்; மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் உண்டு - பெரிய அறிவுடையோர் சபையை அலங்கரிக்கின்ற செல்வமும் உண்டு.
(க-உ) சிலருக்கு மாத்திரம் நுலியற்றுமாற்றலோடு சிறந்த பேசுமாற்றலும் உண்டு.
கல்விக்குச் சிறப்பு சொல்வன்மை
எத்துணைய வாயினுங் கல்வி இடமறிந்
துய்த்துணர் வில்லெனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை யின்றெனின் என்னாகும் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. 5
5. Learning, however extensive, will be useless, unless there be discretion to display it in the proper place; and even then, without the power of language, of what avail is it? With that, it is a flower of gold that possesses fragrance.
(ப-உ) கல்வி எத்துணைய ஆயினும் - (ஒருவனுக்குக்) கல்வி எவ்வளவு இருந்த போதும்; இடம் அறிந்து உய்த்து உணர்வு இல் எனில் இல்லாகும் - நூலின் இடத்தை அறிந்து ஆராய்ந்து அறியும் அறிவு இல்லையாயின் அது பயன் படாதாகும்; உய்த்துணர்ந்தும் - அவ்வாறு ஆராய்ந்து அறிந்தும்; சொல்வன்மை இன்று எனின் என்னாகும் - பேசும் ஆற்றல் இல்லையாயின் என்ன பயனுண்டாகும்? அஃது உண்டேல் பொன் மலர் நாற்றம் உடைத்து - பேச்சுவன்மை இருந்தால் பொன் மலர் மணம் பெற்றது போன்றதாகும்.
(க-உ) இடமறிந்து பொருளறிதலும் பேச்சு வன்மையும் வேண்டும்.
அவை அஞ்சுவார் கல்வி சிறந்ததன்று
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று. 6
6. The learning of those whose frame trembles with diffidence before the assembly - the frivolous loquacity of the ignorant who feel no awe in the assembly - the wealth of those who do not conscientiously bestow alms before they eat - and the merit of a poor man, are things, the absence of which is better than their existance.
(ப-உ) அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் - சபைக்குப் பயந்து உடம்பு நடுங்குகின்றவரின் கல்வியும்; கல்லார் - படியாதவரின்; அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - சபைக்குப் பயப்படாத ஆரவாரச் சொல்லும்; நவை அஞ்சி ஈத்து உண்ணார் செல்வமும் - குற்றத்துக்கு அஞ்சி (வறிய வர்க்குக்) கொடுத்துண்ணாதவரின் செல்வமும்; நல்கூர்ந்தார் இன் நலமும் - வறியவரின் இனிய குணங்களும்; பூத்தலில் பூவாமை நன்று - தோன்றுதலில் தோன்றாமை நல்லது.
(க-உ) சபைக்கு அஞ்சும் கல்வியறிவால் பயனில்லை.
ஊனுடம்பிலும் புகழுடம்பே மேலானது
கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு. 7
7. Though Saraswati dwell in the face of both, Brahma may not vie with the illustrious Tamil bards; for the bodies, which these form by their praises, will not perish like the empty bodies of Brahma’s creation.
(ப-உ) கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் - நாமகளின் வாழ்க்கை (பிரமனது) முகத்திலும் (கற்றவர்) முகத்திலும்ஆனாலும்; மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் - பிரமா புகழுடைய தமிழ்ப் புலவருக்கு ஒப்பாக மாட்டான்; (ஏனென்றால்) மலரவன் செய் வெற்று உடம்பு மாய்வன போல் - பிரமா செய்கின்ற வெறிய (புகழில்லாத) உடம்பு அழிவதைப் போல; இவர் புகழ்கொண்டு செய்யும் மற்று உடம்பு மாயா - இப்புலவர் புகழைக் கொண்டு செய்கின்ற வேறு வகையான உடம்பு அழிய மாட்டாது.
(க-உ) கல்வியாலுண்டாகும் புகழ் என்றும் அழியாது.
சபையில் உதவாக் கல்வி
நெடும்பகல்தாம் கற்ற அவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால். 8
8. The shrinking learning of men broken by long study, which is not available in public, is worse than a wife seen in broad day-light in a neighbour’s, company, for it is an evil that cannot be put away.
(ப-உ) நெடும் பகல் தாம் கற்ற - நீண்டகாலம் தாம் படித்தவைகளை; அவையத்து உதவாது - சபையில் எடுத்துரைக்க முடியாமல்; உடைந்து உளார் - மனம் வருந்தி இருக்கின்றவர்களது; உட்குவரும் கல்வி - அச்சத்தைக் காட்டும் கல்வி; கடும் பகல்-நடுப்பகலில்; ஏதிலான்பால் கண்ட இல்லினும் பொல்லாது - அயலவனிடத்தில் கண்ட ஒருவனுடைய மனைவியிலும் பார்க்கத் தீயதாகும்; (ஏனெனில்) தீது என்று நீப்பு அரிது ஆல் - (இது) தீயதென்று விலக்கி விடுதற்கு முடியாதிருப்பதால்.
(க-உ) சபையிடத்து உதவாத கல்வியாற் பயனில்லை.
படித்தவற்றை மறந்து புதியவற்றைக் கற்றல்
வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்
கெய்த்துப் பொருள்செய் திடல். 9
9. The attempt of those who, without preserving that learning which they have acquired with difficulty, try to make fresh acquirements, is like throwing away gold from their hands and toiling to make a fortune by sifting dust in search of treasure.
(ப-உ) வருந்தி தாம் கற்றன ஓம்பாது - முயன்று தாம் படித்தவைகளை (நினைவில் வைத்துப்) பாதுகாவாமல்; மற்றும் சில பரிந்து கற்பான் தொடங்கல் - வேறு சிலவற்றை வருந்திக் கற்கத் தொடங்குதல்; கை தலத்த கருந்தனம் உய்த்து சொரிந்திட்டு - (ஒருவன்) கையிடத்துள்ள பொன்னை (நிலத்தில்) வீசி எறிந்துவிட்டு; ஆங்கு - அவ்விடத்திலே; அரிப்பு அரித்து எய்த்துப் பொருள் செய்திடல் - அரிப்பரித்து வருந்திப் பொருளைச் சேர்ப்பது போலாகும்.
(க-உ) படித்தவற்றை மறந்து புதியவற்றைக் கற்கத் தொடங்குதல் அறியாமை.
வறியார் கல்வி விளக்கமடையாது
எனைத்துணைய வேனும் இலம்பட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்பா டிலவாம் - மனைத்தக்காள்
மாண்பில ளாயின் மணமகன் நல்லறம்
பூண்ட புலப்படா போல். 10
10. However great may be the learning of poor men, it will never be appreciated so much as a grain to tinay even as, if the mistress of the house possess not the qualifications which become a wife, the virtues, with which her husband is endued, will not become conspicuous.
(ப-உ) மனைத்தக்காள் மாண்பு இலள் ஆயின் - மனைவி சிறப்பில்லாதவளாயின்; மணமகன் பூண்ட நல் அறம் புலப்படா. கணவன் கொண்ட இல்லறம் விளக்கமடைய மாட்டாது; போல் - அது போல; இலம் பட்டார் கல்வி எனைத்துணைய வேனும் - வறியவருடைய கல்வி எவ்வளவு பெரிதாயிருந்தபோதும்; தினை துணையும் சீர்பாடு இலவாம் - தினையளவும் சிறப்பு அடைதல் இல்லையாகும்.
(க-உ) வறியவர் கல்வி பிரகாசிப்பதில்லை.
வறியவர் நல்லவராயினும் மதிப்படையார்
இன்சொல்லன் தாழ்நடைய னுயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற. 11
11. Though he may be courteous in speech, and humble in his behaviour, they will not open their lips to a poor man except in harsh words. Whatever a rich man may say they will crouch beneath his feet. Surely this world surrounded by the sea is full of madness.
(ப-உ) இன் சொல்லன் - (ஒருவன்) இனியசொற் பேசுகின்றவனும்; தாழ்நடையன் ஆயினும் - அடக்கமான ஒழுக்கமுடையவனுமாயினும்; ஒன் றில்லானேல் - அவன் சிறிது பொருளாவது இல்லாமல் இருப்பானானால்; வன்சொல்லின் அல்லது - (உலகத்தவர் அவனிடத்து) கடிய சொற்களைப் பேசுதலல்லது; வாய் திறவா - (இனிய சொற்களைப்) பேசமாட்டார்; கைத்து உடையான் என் சொலினும் - கையிற் பொருளுடையவன் எதைச் சொன்னாலும்; கால் கீழ் ஒதுங்கும் - அவனுடைய காலின் கீழ் அடங்குவர்; கடல் ஞாலம் பித்துடையது - கடல்சூழ்ந்த இவ்வுலகிலுள்ளவர்கள் பைத்தியம் கொண்டவராவர்; பிற அல்ல - வேறொன்றும் உடையவரல்லர்.
(க-உ) வறியவர் நல்லவராயினும் மதிப்பெய்தார்; செல்வர் தீயவராயினும் மதிப்படைவர்.
செல்வரைப் பலர் சூழ்ந்து குறையிரப்பர்
இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்ப - பெரிதுந்தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று. 12
12. Although they see their covetousness, all urge their wants on the rich, and perform their mean behests. The submission of those who were not eminently devout in a former birth to those who were, is doubtless not from ignorance, but the decree of destiny.
(ப-உ) இவறன்மை கண்டும் - ஈயாத தன்மையை அறிந்திருந்தும்; யாரும் உடையாரை குறை இரந்தும் குற்றேவல் செய்ப - எல்லாரும் பொருளுடையவரிடம் (சென்று) தமது குறையை நீக்கும்படி கேட்டு (அவர்) பணிவிடைகளையும் செய்வர்; முன் பகல் தாம் பெரிதும் நோலாதார் - முற்பிறப்பில் தாம் பெரிதும் தவம் செய்யாதவர்; நோற்றாரை பின் செல்லல் கற்பு அன்றே - தவம் செய்தவரைப் பின் சென்று வேண்டுதல் அறிவாகும்; கல்லாமை அன்று - (அஃது) அறியாமை அன்று; ஏ - தேற்றம்.
(க-உ) பொருள் கொடாத உலோபியராயிருந்த போதிலும் செல்வரைப் பலர் சூழ்ந்து குறைகளைச் சொல்லி பணிவிடை செய்வர்.
கற்றார்க்குக் கல்வியே அழகு
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகு செய்வார் 13
13. The learned need no other ornament than the excellence of learning. Nothing is wanting to adornan ornament set perfectly with every precious stone. Who would beautify beauty itself?
(ப-உ) முற்ற முழுமணி பூணுக்கு பூண்வேண்டா - (வேலைப்பாடு) முடிவுறும்படி முழு மாணிக்கங்கள் பதித்த ஆபரணத்துக்கு அழகு செய்வதற்கு வேறு ஆபரணம் வேண்டியதில்லை; (அதுபோல) கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் - படித்தவர்களுக்குப் படிப்பின் அழகே அழகாவதல்லது; மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் - (அவருக்கு) வேறு ஆபரணம் வேண்டியதில்லை; யாரே அழகுக்கு அழகு செய்வார் - ஏனெனில் எவர் தாம் அழகுக்கு அழகு செய்வர்? (செய்யார் என்றவாறு)
(க-உ) கற்றவருக்குச் சிறந்த அழகாவது கல்வியே; பிறர் மதிப்பெய்துவதற்குக் கல்வியில்லாதவரைப் போல அவர் தம்மை அலங்கரித்துக் கொள்ள வேண்டியதில்லை.
எல்லாமறிந்தவர் உலகில் இல்லை
முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉங்
கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற்
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தினால். 14
14. There are none who understand every thing. Exult not in the idea that your learning is universal. The rock will give way to the small chisel of the mason; it will not, O thou adorned with massive ornaments, yield to the blacksmith’s hammer.
(ப-உ) முற்றும் உணர்ந்தவர் இல்லை - எல்லாம் அறிந்தவர் (இவ்வுலகத்தில்) இல்லை; முதுவதூஉம் கற்றனம் என்று களியற்க - (ஆகவே) எல்லாவற்றையும் படித்தறிந்து விட்டோமென்று செருக்குக் கொள்ள வேண்டாம்; கனம் குழாய் - பாரமான காதணியை அணிந்தவளே; சிறு உளியால் கல்லும் தகரும் - சிறிய உளியினால் பாறைகளும் உடையும்; கொல் உலைக் கூடத்தினால் தகரா - (ஆனால்) கொல்லனது உலையிடத் துள்ள சம்மட்டியினால் அப்பாறை உடையாது.
(க-உ) உலகில் எல்லாம் அறிந்தவர் இல்லை; பெரிய கல்வி ஆளர் அறியாத கருத்துக்கள் சில பொதுமக்களிடத்தும் காணப்படும்; ஆகவே கல்விச் செருக்குக் கூடாது.
கற்றாரை நோக்கிச் செருக் கொழிக
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று. 15
15. Contemplate those who are poorer than yourselves, and rejoice in the greatness of your possessions. Contemplate those who are more learned than yourselves, and destroy self-conceit, exclaiming what is all our learning to these!
(ப-உ) தம்மின் மெலியாரை நோக்கி - தம்மைக் காட்டிலும் வறியவர்களைப் பார்த்து; தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - அம்மா! தம்மிடத்திலுள்ளது பெரியது என்று மனம் மகிழ்தல் வேண்டும்; தம்மினும் கற்றாரை நோக்கி - தம்மிலும் பார்க்கப் படித்தவரைப் பார்த்து; நாம் கற்றது எல்லாம் இவர்க்கு எற்றே என்று கருத்து அழிக - நாம் படித்ததெல்லாம் இவர் படிப்புக்கு எவ்வளவென்று (செருக்கான) எண்ணத்தை விட்டு விடுதல் வேண்டும்.
(க-உ) தம்மிலும் வறியவரைக் காணும் போது தமது செல்வம் பெரிது என்று மகிழ வேண்டும்; தம்மிலும் கற்றாரைக் காணும் போது தமது கல்வி அற்பம் என்று செருக்கு ஒழிய வேண்டும்.
செல்வத்துக் கழகு பணிவு
கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமுந்
தலைவணங்கித் தாழப் பெறின். 16
16. The wealth, which consists in the possession of learning, and the possession of riches. may be termed wealth indeed, if its possessors bow the head with humility, as the destitute who stand begging before them.
(ப-உ) இல்லார்-வறியவர்; குறை இரந்து தம் முன்னர் நிற்பபோல் - தமது குறையை வேண்டித் தமக்கு முன்னால் நிற்பது போல; தாமும் தலை வணங்கித் தாழப் பெறின் - தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்பார்களாயின்; கல்வி உடைமை பொருள் உடைமை என்று இரண்டு செல்வமும் - கல்விச் செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டு செல்வங்களும்; செல்வம் எனப்படும் - சிறந்த செல்வங்கள் என்று (அறிவுடையோரால்) சொல்லப்படும்.
(க-உ) கல்விச் செல்வத்துக்கும் பொருட் செல்வத்துக்கும் சிறப்புத் தருவது பணிவே.
அறிவில்லாதாருக்கு அறிஞர் தாழ்ந்து நடப்பர்
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலிதன்றே தாழுந் துலை. 17
17. If men of real dignity perceive presumption in the conduct of their inferiors, they will behave with more humility. In weighing, while the lighter rises higher and higher, does not the heavier sink down the scale?
(ப-உ) தூக்கின் - நிறுத்துப் பார்க்கும்போது; துலை மெலியது மேன்மேல் எழ செல்லச் செல்ல - தராசில் பாரங் குறைந்த பொருளுள்ள தட்டு மேலும் மேலும் உயரச் செல்லச் செல்ல; வலிது அன்றே தாழும் - பாரமான பொருளுள்ளதன்றோ தாழும்; (அது போல) ஆக்கம் பெரியார் - அறிவாலும் செல்வத்தாலும் பெரியவர்; சிறியோர் இடைபட்ட மீ செலவு காணின் நனிதாழ்ப - (அவ்விரண்டுமில்லாத) சிறியவரிடத்து வரம்புகடந்த நடத்தை கண்டால் அவர்களுக்கு மிகவும் தாழ்ந்து நடப்பர்.
(க-உ) அறிவில்லாதவர் வரம்பு கடந்து நடப்பின் அறிவுடையார் பணிவர்.
தற்புகழ்ச்சி தீது
விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப் பகையை
வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின். 18
18. Even the good works of moral men, who shun what is to be avoided, and practise what has been enjoined, become evil, if, proudly boasting that they have conquered the enmity of the senses, and stood stead fastly in a virtuous course, they themselves dwell on their own merits.
(ப-உ) புலம் பகையை பிற வென்றனம் - ஐம்புலன்களாகிய பகையையும் பிறவற்றையும் வென்றுவிட்டோம்; நல் ஒழுக்கில் நின்றேம் என்று - நல்ல ஒழுக்க நெறியில் நிற்கின்றோமென்று; தம் பாடு தம்மில் கொளின் - தம்முடைய பெருமையைத் தாமே நினைத்துக் கொள்வா ராயின்; விலக்கிய ஓம்பி - விலக்கப்பட்டவற்றைச் செய்யாமல் காத்து; விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையும் தீதே - (செய்யத்தக்கன வென்று) விதிக்கப் பட்டவைகளைச் செய்யும் நல்ல தன்மையுடையவர்கள் செய்யும் நல்ல செயல்களும் தீயனவாகும்.
(க-உ) உயர்ந்த ஒழுக்க நெறியில் நிற்பவர்களும் தம்மைப் புகழ்தல் தீயதாகும்.
தன்னைப் புகழாமையே நன்று
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம். 19
19. To praise oneself in order to attract admiration, is like feeding the flame with pure water - Is not the absence of self-admiration that which is to be admired? Is not happiness freedom from the desire of pleasure?
(ப-உ) தன்னை வியப்பிப்பான் தன் புகழ்தல் - (ஒருவன்) தன்னைப் பிறர் மதிக்க வேண்டுமென்று கருதித் தன்னைப் புகழ்தல்; நல் நீர் சொரிந்து தீ சுடர் வளர்த்தற்றால் - நல்ல நீரை ஊற்றி நெருப்புச் சுடரை வளர்த்தது போலாகும்; தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது - தன்னைப் புகழாது இருப்பதன்றோ நல்ல மதிப்பாவது; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமல் இருப்பதல்லவோ இன்பமாவது.
(க-உ) தன்னைப் புகழ்ந்து புகழ்பெற நினைத்தல் நீர் ஊற்றித் தீ வளர்த்தது போலாகும்.
பிறர் மதிப்புவேண்டுவான் செய்யத் தக்கவை
பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல் 20
20. For him who desires much notice from others, there is one act of penance which he must never forget to practise; continually to dwell upon all the merits, and conceal the defects, of others and to address all with humility.
(ப-உ) பிறரால் பெரும் சுட்டு வேண்டுவான் - பிறரால் மதிக்கப்படும் பெரிய மதிப்பை வேண்டுகின்றவன்; யாண்டும் மறவாமே நோற்பது ஒன்று உண்டு-எப்பொழுதும் மறவாமல் செய்வது ஒன்று உள்ளது; (அது) பிறர் பிறர் சீர் எல்லாம் தூற்றி - மற்றவரது சிறப்புக்களை யெல்லாம் சொல்லிப் பரப்பி; சிறுமை புறம் காத்து - சிறப்பல்லாதவற்றைப் பரவாமல் அடக்கி; யார் யார்க்கும் தாழ்ச்சி சொலல் - எல்லாரிடத்தும் வணக்கமான மொழிகளைப் பேசுதல்.
(க-உ) பிறர் மதிப்பை விரும்புகின்றவன் மற்றவர் நன்மைகளைச் சொல்லித் தீமைகளைச் சொல்லாதிருக்க வேண்டும். எல்லாரிடத்தும் வணக்கமான மொழிகளைப் பேச வேண்டும்.
கற்றபடி நில்லாதவரின் சொற்சாதுரியம்
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்த்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல் 21
21. The empty speech of those, who do not themselves persist in what they have learned, and taught to others has weight only in one respect; in the indirect reproof of those who do not put them to shame by asking directly, why is it that you, who have taught others, do not practise yourself what you teach.
(ப-உ) கற்று பிறர்க்கு உரைத்து தாம் நில்லார் வாய்படூஉம் - (நூல்களை) படித்து அக் கருத்துக்களைப் பிறர்க்குச் சொல்லித் தாம் அவ்வாறு நடவாதவருடைய வாயிலிருந்து பிறக்கும்; வெறு உரைக்கு ஓர் வலி உடைமை உண்டு - பயனில்லாத சொல்லுக்கு ஒரு வலிமை உள்ளது; (அது) சொற்ற நீர்நில்லாதது என் என்று - (நாங்கள்) நடக்க வேண்டுமென்று சொல்லுகின்ற நீர் அப்படி நடவாதது ஏன் என்று; நாண் உறைப்ப நேர்த்து ஒருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் - நாணம் மிக உண்டாகும்படி ஒருவன் நேரே சொல்லாதபடி ஆராய்ந்து சொல்வதாகும்.
(க-உ) கற்றபடி தான் நடக்காதவர் பிறர்க்குப் போதிப்பது பேதைமை.
பொருள்பெற்றுக் கல்வி கற்பித்தலாகாது
பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார் - திறப்படூஉந்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல். 22
22. Those, who sell to others the advantages of the mysteries which they have learned, reserve an advantage of another description to themselves; the receiving the labours of the king of the dead, with the hardihood that defies the terrors of an evil life.
(ப-உ) பிறர்க்குப் பயன்பட தாம் கற்ற விற்பார் - பிறருக்குப் பயனாகும்படி தாம் கற்றவற்றைப் பொருளுக்குக் கொடுப்பவர்; தமக்கு பயன்வேறு உடையர் - தமக்கு வேறொரு பயனை உடையவராவர்; (அது) திறம் படூஉம் தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார் கோவினை - பலவகைப்பட்ட தீய செயல்களையும் செய்ய அஞ்சாத வீரம் கொண்ட தென்புலத்தார் என்னும் பிதிர்களின் அரசனை; வேலை கொளல் - (தங்களை நரகத்திலிட்டு வருத்துதலாகிய) வேலையைச் செய்யப் பண்ணுதல்.
(க-உ) பொருள் பெற்றுக் கொண்டு கல்வியைச் சொல்லிக் கொடுத்தவர் நரகில் வருந்துவர்.
கற்றவர் சபையில் கல்லாதார் எழுதல்
கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்(கு)
ஒற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லுரு அஞ்சுவ போல். 23
23. The ceaseless chattering, in the learned assembly, of the coarse lips of those who were not destined to learning, tells us not to fear their otherwise powerful appearance, as the beasts and birds fear a figure of straw.
(ப-உ) கற்பன ஊழ் அற்றார் - கற்கவேண்டியவற்றைக் கற்கும் நல்ல ஊழ் இல்லாதவர்; கல்வி கழகத்து - கற்றவர் இருக்கும் சபையில்; ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் - அடக்கம் இல்லாமல் ஊத்தை வாயைத் திறந்து பேசுதல்; மாபறவை புல்உரு அஞ்சுவ போல் வல்உரு அஞ்சன் மின் என்பவே - விலங்குகளும் பறவைகளும் புல்லாற்செய்து வைக்கப்பட்ட உருவத்துக்கு அஞ்சுவது போலத் தம்முடைய வலிமையான உருவத்துக்கு அஞ்ச வேண்டாம் என்று சொல்வது போலாகும்.
(க-உ) கற்றவர் சபையில் கல்லாதவர் எழுந்தால் அவரைக் கற்றவர் பொருட்படுத்தார்.
தற்பெருமையாளரிடம் கல்வி சேராது
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடுகொளப் படுவ தில். 24
24. Inexhaustible learning is attainable only by those who excel in observation; not by those who smile in vain self-conceit. Though a woman posses charms which Lachmi might envy, they cannot be enjoyed by an Hermaphrodite.
(ப-உ) தாக்கு அணங்கும் ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் - (பெண்) தாக்கி வருத்துகின்றதும் ஆண்களால் விரும்பப்படுவது மாகிய பெண்மைத் தன்மை உடையதாயினும்; பெண் நலம் பேடு கொளப் படுவதில் - பெண்ணினுடைய இன்பம் ஆண் தன்மை இல்லாதவனால் கொள்ளப்படுவதில்லை; (அதுபோல) போக்கு அறு கல்வி - குற்றமற்ற கல்வி; புலம் மிக்கார்பால் அன்றி - அறிவு மிக்கவரிடத்திலல்லாமல்; மீக் கொள் நகையினார் வாய் சேரா - தற்பெருமையால் நகையாடுகின்ற வரிடத்திற் சேரமாட்டா.
(க-உ) கல்வி தற்பெருமை கொண்டிருப்பவரை அடையாது.
மூடர்க்கு அறிவு கொளுத்த முடியாது
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்துந்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன். 25
25. If learned men incur disrespect, while forcing instruction into the ears of the ignorant, the fault is their own. If, with all their knowledge, they do not know their neighbours’ qualities, why should they be hurt at these ignorant neighbours for not knowing their merits.
(ப-உ) கற்றன - தாம் கற்றவற்றை; கல்லார் செவிமாட்டி - மூடரின் செவியில் நுழைக்க முயல்வதால்; கையுறூஉம் குற்றம் தமதே - அடையும் குற்றம் அவருடையதே; பிறிது அன்று - வேறொருவருடையதன்று; முற்றும் உணர்ந்தும் அவர் தன்மை உணராதார் - எல்லாம் அறிந்தும் அம்மூடரின் தன்மையை அறியாதவர்; தம் உணரா ஏதிலரை நோவது எவன் - தமது குற்றத்தை உணராது அம்மூடரை நொந்து கொள்வது ஏன்?
(க-உ) மூடருக்குக் கல்வி புகட்டப்புகுந்து அவர்களால் அவமானப்பட்ட கற்றவர்கள் எல்லாம் அறிந்திருந்தும் அம்மூடரின் தன்மையை அறியாதவராவர். அவர்கள் தமது குற்றத்துக்கு வருந்தாது அம்மூடரை நொந்துகொள்வது ஏன்?
கீழோர் மேலோர் இயல்பு
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய
அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கைக் களிறு. 26
26. The noble wait not in attendance at the royal court: and there are some others, who have no enjoyment in waiting there. The cat frequents the splendid zenana, while the hollow handed elephants, which can tear up the pillars to which they are bound, remain without the gate.
(ப-உ) மிகல் மக்கள் வேத்து அவை காவார் - உயர்ந்தவர்கள் அரசனுடைய சபையில் (பரிவாரங்களாகக்) காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; வேறு சிலர் காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - இவர்களல்லாத வேறு சிலர் (அவ்வரச சபையைக்) காத்துக் கொண்டு நின்றும் மகிழ்ச்சியடைய மாட்டார்; மா தகைய அந்தப்புரத்தது பூஞை - பெருமையுடைய பெண்கள் தங்கும் அறையிடத்துப் பூனை இருக்கும்; கந்து கொல் பூட்கை களிறு புறங்கடையது - கட்டுத் தறியை முறிக்கும் வலியுடைய யானை தலைவாயிலில் நிற்கும்.
வேந்து - வேத்து என நின்றது.
(க-உ) அரசரது பரிவாரங்களாக இருந்தும் சிலர் பெருமை அடையார். அவ்வாறில்லாத அறிஞர் வெளியே நிற்பினும் பெருமை அடைவர்.
இவர்க்கு இவர் தெய்வமெனல்
குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க்
கடிகளே தெய்வம் அனைவோர்க்குந் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை. 27
27. To well**orn women, their husband is a god; to children, their father and mother; to the virtuous, their spiritual preceptor is a god; and a god to all, is the kind, adorned with leaf-like ornaments of pale gold.
(ப-உ) குலம் மகட்கு கொழுநனே தெய்வம் - நல்ல குடியிற் பிறந்த (ஒழுக்கமுடைய) பெண்களுக்குக் கணவனே தெய்வம்; புதல்வர்க்கு தந்தையும் தாயும் (தெய்வம்) - மக்களுக்குத் தந்தையும் தாயும் தெய்வம்; அறவோர்க்கு அடிகளே (தெய்வம்) - (நல்லவழியில் செல்லும்) மாணாக் கருக்கு ஆசிரியரே தெய்வம்; எல்லார்க்கும் இலைமுகம் பைம்பூண் இறை தெய்வம் - எல்லோருக்கும் இலைமுகம் போன்ற பசுமையான பொன் ஆபரணங்கள் அணிந்த அரசன் தெய்வமாவான்; மன்ற - உறுதியாக.
(க-உ) குலமகட்குக் கணவனும், புதல்வர்க்குத் தந்தையும் தாயும், மாணாக்கருக்கு ஆசிரியரும், குடிகள் எல்லோருக்கும் அரசனும் தெய்வமாவர்.
குடிகளைக் காவாத ஆட்சி பயனற்றது
கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான்
மன்பதை யோம்பாதார்க் கென்னும் வயப்படைமற்
றென்பயக்கும் ஆணல் லவர்க்கு. 28
28. Though men possess the royal privilege of speaking with the eye, and seeing with the ear, as the fruit of former virtues; of what avail is it, unless they protect the earth with their clemency? What advantage will mighty weapons afford to those, who are wanting in manly courage?
(ப-உ) கண்ணின் சொலி செவியில் நோக்கும் இறைமாட்சி - கண் பார்வையால் கருத்தை அறிவித்துக் காதினால் கேட்பதால் கண்ணாற் கண்டது போல் அறியும் அரசனுடைய பெருமை; புண்ணியத்தின் பாலதே ஆயினும் - முற்செய்த புண்ணியத்தால் உண்டாவதானாலும்; தண் அளியால் மன்பதை ஓம்பாதார்க்கு - குளிர்ந்த கருணையால் குடிகளைப் பாதுகாவாத அரசருக்கு; என்னும் - (அவருடைய சிறப்பு) என்ன பயனுடையது? ஆண் அல்லவர்க்கு வயப்படை என் பயக்கும் - ஆண் தன்மையில்லாதவர்க்கு வெற்றி தரத்தக்க ஆயுதம் என்ன பயனைத் தரும்?
(க-உ) குடிகளை நல்ல முறையில் காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரம் பயனற்றது.
குடிகளை வருத்தி வரி கொள்ளலாகாது
குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல. 29
29. To a prince, who destroys his subjects to obtain his revenue, to cut open the udder of a new milched cow, to obtain her milk, would be comparatively creditable; but to those who protect their subjects before receiving their own dues, we have seen wealth overflowing like a flood.
(ப-உ) குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்கு - குடிகளை வருத்தி வரிவாங்கும் அரசனுக்கு; கன்று ஆ மடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றுடைய பசுவின் மடியை அறுத்துப் பால் எடுப்பதும் நல்ல செயலாகும்; குடி ஓம்பி கொள்ளுமா கொள்வோர்க்கு - குடிகளைப் பாதுகாத்து வாங்கும் முறைமையில் (வரியை) வாங்கும் அரசருக்கு; மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும் -பெரிய செல்வம் வெள்ளத்திற்கும் அதிகமாகப் பெருகுவதைக் காண்கின்றோம்.
(க-உ) குடிகளை வருத்தாது வரிகொள்ளும் அரசனின்
செல்வம் வளரும்.
கொடுங்கோல் அரசன் இயல்பு
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன்
ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும்
வேடலன் வேந்தும் அலன். 30
30. He, who will not wait till to-morrow, to receive, that which becomes due to-day; who will not attend, when one stands to beg redress; and who will gnash his teeth with impatience when one may approach to offer wise advice; is neither a Vedan who robs on the highway, nor a king.
(ப-உ) இன்று கொளற்பால நாளை கொளப் பொறான் - இன்று வாங்கவேண்டிய பொருளை நாளைக்கு வாங்கப் பொறுத்திருக்க மாட்டான்; நின்று குறை இரப்ப நேர்படான் - (குடிகள்) முன்னே நின்று தமது குறைகளைச் சொல்ல அகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூற எயிறு அலைப்பான் - ஒருவன் சென்று தனக்கு ஆகவேண்டியவற்றைச் சொன்னால் பல்லைக் கடித்துக் கோபிப்பான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - (அவன்) வழிப்பறி செய்யும் வேடனுமல்லன் அரசனும் அல்லன்.
(க-உ) குடிகளை வருத்திப் பொருள் கொள்ளும் அரசன் வழிபறிக்கும் வேடனிலும் கொடியவன்.
அரச செல்வத்தில் மயக்கம்
முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறிற் செவிகொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். 31
31. A king, who after crowning his head with chaplets, rubbing his body with unguents, clothing himself in rich robes, and feasting on rich viands, will not lend his ear, nor open his eyes, though addressed with reiterated earnestness, is but a corpse endued with breath.
(ப-உ) முடிப்ப முடித்து - முடியிற் சூடத்தக்க (பூமாலைகளைச்) சூடிக்கொண்டு; பின் பூசுவ பூசி - பின்பு உடலிற் பூசவேண்டிய (புனுகு சந்தனம் முதலியவற்றைப்) பூசிக் கொண்டு; உடுப்ப உடுத்து - உடுக்க வேண்டிய (உடைகளை) உடுத்துக் கொண்டு; உண்ப உண்ணா - உண்ணத்தக்க (நல்ல உணவுகளை) உண்டு கொண்டு, இடித்து இடித்து கட்டுரை கூறின் - பலமுறை நெருக்கி உறுதி மொழிகளைச் சொன்னாலும்; செவி கேளா - காதினாற் கேளாமலும்; கண் விழியா - கண்களாற் பாராமலும் (இருக்கின்ற அரசர்); நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் - மூச்சு விடுகின்ற பிணங்களாவர்.
முடித்துப் பூசி உடுத்து உண்டு கேளாது பாராது இருக்கும் அரசர் மூச்சுவிடும் பிணத்துக்குச் சமம்.
(க-உ) அரச செல்வத்தில் மயங்கிக் குடிகளின் குறைகளைக் கேளாத அரசன் பிணத்துக்குச் சமம்.
அரசன் செய்யவேண்டியவை
ஓற்றிற் றெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
குறையிடினுங் கேளாமை யன்று. 32
32. The duty of him who holds a sceptre. is to fear on account of the difficulty of detecting wrong; even though, assured that it cannot be ascertained by spies, he has in person made private inquiry, his own arm adorned with gold being his only protection; not to refuse to listen, though men come and complain of it.
(ப-உ) ஒற்றில் தெரியா - ஒற்றரால் அறிய முடியாதவைகளை; சிறைப்புறத்து ஓர்தும் என - ஒதுக்கிடங்களில் நின்று அறிவோமென்று; பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்வளை அணிந்த (தனது) தோளே தனக்குத் துணையாக அங்கு நின்று அறிந்தும்; குற்றம் அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குற்றம் யாது என்று அறிய முடியவில்லையே என்று அரசன் பயப்படுவதே நீதி ஆட்சியாகும்; சென்று குறையிடினும் கேளாமை அன்று - சென்று குறைகளை முறையிட்டாலும் கேளாமல் இருப்பதன்று.
(க-உ) அரசனுடைய சிறப்பியல்பு குடிகளின் குறைகளை அறிந்து அவைகளைத் தீர்த்தலாகும்.
பொய் நீக்கி மெய் கொள்ள வேண்டும்
ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று
காக்கை வெளிதென்பார் என்சொல்லார் தாய்க்கொலை
சால்புடைத் தென்பாரு முண்டு. 33
33. While others assert every thing, the wisdom of the Prince is to receive their assertions, rejecting what is false. What will not men say, who standing opposite to a crow, will call it white? There are some, who will even say, that the murder of a mother is noble.
(ப-உ) ஏதிலார் யாதும் புகல - பிறர் தமக்குத் தோன்றியவாறு எல்லாம் சொல்ல; இறைமகன் கோதுஒரீஇ கொள்கை - அரசன் அவர்கள் கூறிய வற்றின் குற்றமானவை நீக்கி நல்லவற்றைக் கொள்ளுதல்; முதுக்குறைவு - அறிவுடைமையாகும்; நேர் நின்று காக்கை வெளிதென்பார் என் சொலார் - காகத்துக்கு முன்னால் நின்று அது வெண்ணிறமுடைய தென்று சொல்லு கின்றவர்கள் எதைச் சொல்ல மாட்டார்கள்; தாய்க்கொலை சால்பு உடைத்து என்பாரும் உண்டு - தாயைக் கொலை செய்தல் நீதி என்று கூறு கின்றவர்களும் இவ்வுலகத்தில் உண்டு.
(க-உ) பிறர் கூறுகின்றவற்றிற் பொய்ந் நீக்கி உண்மை கொள்ளுதல் அரசர்க்கு அறிவுடைமை.
மூடர் கேடறியார்
கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்(கு)
உண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து 34
34. Though ruin be before their eyes, will fools perceive it? No, they will not: though thick flames envelope their body, the sleeping rock serpents will not arouse from their loud**reathing slumbers.
(ப-உ) கேடு கண்கூடு ஆ பட்டது எனினும் - (தமக்கு) வருங்கேடு கண்ணுக்குத் தெரிபவாயினும்; கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி - மூடருக்கு அதனின்று தப்பிப்பிழைக்கும் உணர்ச்சி உள்ளதோ? இல்லாகும் - இல்லை யாகும்; மண்டு எரிதான் வாய் மடுப்பினும் - மிக்க நெருப்புத் தன்னைச் சூழ்ந் தாலும்; மாசுணம் பெருமூச்செறிந்து கண் துயில்வ - பாம்பு பெருமூச்சு விட்டு நித்திரை கொள்ளும்; பேரா - அவ்விடத்தைவிட்டு நீங்காது.
(க-உ) ஆபத்து அண்மையில் இருப்பதை அறிந்தாலும் கீழ்மக்கள் அதனை உணரார்.
கேட்டுக்கு அறிகுறி
நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி. 35
35. The estrangement of friends, the receiving of enemies into friendship; to scoff at a spy, and to suspect all associates; to despise the continued advice of the wise; and become changed in disposition, are signs of approaching ruin.
(ப-உ) நட்புப் பிரித்தல் - நண்பர்களைப் பிரிந்து போகும்படி செய்தலும்; பகை நட்டல் - பகைவரை நண்பராக்கிக் கொள்ளுதலும்; ஒற்று இகழ்தல் - ஒற்றரை அவமதித்தலும்; பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - கூட இருப்பார்கள் தக்கார் நெடுமொ கோறல் - அறிவுடையவரின் எல்லாரை யும் சந்தேகித்தலும்; அறிவுரைகளை அழித்தலும்; குணம் பிறிது ஆதல் - நல்லகுணத்திலிருந்து மாறுபடுதல்; கெடுவது காட்டும் குறி - (ஆகிய இவைகள்) வரப்போகும் கேட்டைக் காட்டும் அடையாளங்களாகும்.
(க-உ) நட்புப் பிரித்தல் முதலியன கேடு வருவதற் கறிகுறிகளாகும்.
செல்வச் செருக்கால் பெரியாரைப் பிழைத்தல்
பணியப் படுவார் புறங்கடைய ராகத்
தணிவில் களிப்பினால் தாழ்வார்க் - கணிய(து)
இளையாள் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்
தொலையாத 1போகங் கொளல். 36
36. The men, who are sunk in immoderate delights, while those who ought to be honoured are waiting at the gate, though now they embrace the goddess of prosperity, are not far from the enjoyment of the charms of the close bosom of her elder sister, adversity.
(ப-உ) பணியப்படுவார் புறங்கடையர் ஆக - தாம் வணங்கி எதிர்கொள்ளத்தக்கவர் தலைவாயிலில் நிற்க; தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு - அடங்காத செல்வச் செருக்கினால் (அவரை எதிர் கொள்ள) காலம் நீட்டிப்பவருக்கு; இளையாள் முயக்கு அணியது எனினும் - இலக்குமியின் சேர்க்கை அவர்க்குக் கிட்ட இருந்த போதும்; மூத்தாள் தொலையாத போகம் கொளல் சேய்த்து அன்று - மூதேவியின் நீங்காத சேர்க்கையைப் பெறுதல் தொலைவில் இல்லை.
(க-உ) செல்வச் செருக்கினால் பெரியாரை மதியாவிட்டால் மூதேவி குடி கொள்வள்.
நற்குணமுடையோர் பண்பு
கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு. 37
37. The nobly generous whose glance is a bud; their smiling countenance, a fresh blown blossom; the truth of their courteous speech, the sweet young fruit; and munificence, the ripe fruit; are not these the real inexhaustible calpa tree?
(ப-உ) கண் நோக்கு அரும்பு ஆ - கண்ணால் பார்க்கும் பார்வை அரும்பாகவும்; நகை முகமே நாள் மலர் ஆ - மலர்ந்த முகமே புதுப் பூவாகவும்; இன்மொழியின் வாய்மையே தீம் காய் ஆ - இனிய சொல்லின் உண்மையே இனிப்பான காயாகவும்; வண்மை பலம் ஆ - கொடையே பழம் ஆகவும்; நலம் கனிந்த பண்புடையார் அன்றே சலியாத கற்பக தரு - நன்மைகள் பழுத்த நற்குணமுடையவர் அல்லவோ இளைத்தல் இல்லாத கற்பக மரமாவர்.
(க-உ) நிறைந்த குணமுடையவர் சொல்லாலும் செயல்களாலும் இனியராயிருப்பர்.
யானையுணவின் ஒருசிறிது கோடி எறும்பிற்கு உணவு
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்(டு)
ஊரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று. 38
38. The drowsy elephant will not grudge the few grains which may fall from the ball of rice that it is receiving: the creeping ants will pick them up, and ten million living creatures will subsist, feasting with their crowded progeny.
(ப-உ) வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின் - தான் வாங்கி உண்கின்ற ஒருவாய் உணவின் ஒரு சிறு பகுதி வாய்க்குள் போகாது தவறி விழுந்துவிட்டால்; தூங்கும் களிறு ஓ துயர் உறாது - அசைந்து கொண்டு நிற்கும் யானையோ துன்பம் அடையமாட்டாது; ஆங்கு அது கொண்டு - அவ்விடத்தில் விழுந்த அதனைக் கொண்டு; இங்கு ஊரும் எறும்பு ஒரு கோடி ஆரும் கிளையோடு அயின்று உய்யும் - இவ்வுலகில் ஊருகின்ற எறும்புகளில் ஒரு கோடி தங்கள் நிறைந்த சுற்றத்தோடு உணவை உண்டு உயிர் வாழும்.
(க-உ) யானைக்குக் கொடுக்கும் கவள உணவின் ஒரு சிறிது கோடி எறும்புக்கு உணவாகும்.
அரசனுடைய நன் மதிப்பு
மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய - மாகொல்
பகைமுகத்த வெள்வேலான் பார்வையிற் றீட்டும்
நகைமுகத்த நன்கு மதிப்பு. 39
39. The smiling approbation, which is expressed in the glance of the prince, whose bright javelin threatens the death of wild beasts; is a prouder thing, than the gift of a heap of treasure, large enough to diminish the sky.
(ப-உ) பகை முகத்த மா கொல் வெள் வேலான் - பகைவரது போர்க்களத்தே குதிரையைக் கொல்கின்ற வெள்ளிய வேலையுடைய அரசன்; நகை முகத்த பார்வையில் தீட்டும் நன்கு மதிப்பு - மலர்ந்த முகத்திலுள்ள கண்களால் தோற்றுவிக்கும் நன்மதிப்புகள்; மாகம் சிறுக குவித்த நிதிக்குவை ஈகையின் - மேகமும் சிறிது (என்னும்படி) குவித்த பொருள் குவியலைக் கொடுத்தலினும் பார்க்க; ஏக்கழுத்தம் மிக்குடைய- பெருமிதம் பெரியதாகும்.
(க-உ) அரசன் நன்மதிப்பைப் பெறுதல் பொன் குவியலைப் பெறுதலிலும் பெருமை தருவது.
அடைக்கலம் காத்தல்
களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர்
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய(து)
ஊனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே
தானுடம் பட்டார்க டாம். 40
40. Those will not spare their worthless bodies, in the hope of any future profit, should anything happen even to such as are under their protection; who, sensible how frail is the body of flesh, have determined to preserve the body of glory.
(ப-உ) ஊன் உடம்பு தளர் நடையது என்று - இறைச்சியாலான இவ்வுடம்பு நிலைதளரும் இயல்புடையது என்று கருதி; புகழ் உடம்பு ஓம்புதற்கு உடம்பட்டார்கள் தாம் - புகழ் உடம்பை வளர்ப்பதற்குத் தீர்மானித்தவர்கள்; தம் களைகண் ஆ அடைந்தார்க்கு-தமது ஆதரவைநாடி வந்து சேர்ந்தவர்க்கு; உற்று உழியும் - (ஒரு சிறிய துன்பம்) வந்தவிடத்தும்; மற்று ஓர் விளைவு உன்னி வெற்றி உடம்பு தாங்கார் - (புகழல்லாத) வேறொன்றனை விரும்பித் தமது ஊனுடம்பை வைத்திருக்கமாட்டார்.
(க-உ) உலகில் தம்புகழை நாட்ட விரும்புவோர் தமது உடலைக் கொடுத்தும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்தவரைக் காப்பர்.
மதிப்பை இழத்தலாகாது
தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்
இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - பின்னர்ச்
சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்(கு)
இறுவரை யில்லை யெனின். 41
41. If any would save their sweet lives, by sacrificing courage and honour; let them to do so, provided even then they can be secure from death, for ever so short a time.
(ப-உ) பின்னர் சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு இறுவரை இல்லை எனின் - இனிமேல் சிறிது கால அளவாயினும் தமக்குத் திண்ணமாகச் சாவு இல்லையானால்; தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று - தமது வலிமையையும் மதிப்பையும் இழந்து; தம் இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - தமது இனிய உயிரைக் காப்பாற்றினும் காப்பாற்றுக. ‘ஆங்கு’ இடைச்சொல்.
(க-உ) இனிமேல் மரணமில்லையென்று கண்டால் தனது மானத்தையும் மதிப்பையும் ஒருவன் இழந்தாயினும் தன் உயிரைக் காப்பாற்றலாம்.
சாவுக்கு அஞ்சாதவர்
கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
புலனொடுங்கப் பொய்யொழிந் தாரும் - கொலைஞாட்பின்
மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண்மறலி
தும்பை முடிசூ டினும். 42
42. Virtuous matrons, who have laid aside their ornaments in widowhood; those, who, having done away with falsehood, have brought the five senses to agree: and warriors, who, in the slaughterous field of battle, retain their courage; fear not, though grim Yaman assume the chaplet of Drona flowers.
(ப-உ) கலன் அழிந்த கற்புடை பெண்டிரும் - கணவன் இறத்தலால் நகைகளைக் களைந்த கற்புடைய பெண்களும்; ஐந்து புலன் ஒடுங்க பொய் ஒழிந்தாரும் - (மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்) ஐந்து புலன்களும் குன்றும்படி பொய்யை விட்டவரும்; கொலை ஞாட்பின் மொய்ம்பு உடை வீரரும் - போர்க்களத்திலுள்ள வலிய வீரரும்; முரண் மறலி தும்பை சூடினும் அஞ்சார் - வலிய இயமன் தனது முடியிலே தும்பை மாலை சூடினாலும் (எதிர்த்தாலும்) அஞ்சமாட்டார்.
(க-உ) கணவனை இழந்த கற்புடை மகளிரும், துறவிகளும், வீரரும் உயிரைவிட அஞ்சார்.
மெய்யறிவுடையோர் சாக அஞ்சார்
புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர்
விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
சுளியார் சுமைபோடு தற்கு 43
43. Fools will sigh deeply at the thought of death, though their bodies be corrupted with sores full of crawling worms, the rank odour of which may be perceived at the distance of five miles; but those, who have derived the true advantage of the body, will not shudder to lay down the burden.
(ப-உ) புண் அழுகி புழு நெளிந்து யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த ஏனும் - (தமது உடல்) புண்ணானது அழுகிப் புழு நெளிந்து ஒரு யோசனை தூரம் மிகுதியாக வீசுகின்ற தீய நாற்றம் உடையதாயிருந்த போதிலும்; விழலர் - அறிவில்லாதவர்; விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர் - இறத்தலை அஞ்சி பெருமூச்சு விடுவர்; மெய் பயன் கொண்டார் - உடம் பினாலாகிய பயனை அடைந்த அறிவுடையோர்; சுமை போடுதற்கு சுளியார் - உடம்பாகிய சுமையை விடுதற்கு நடுங்கமாட்டார்.
(க-உ) உடம்பின் பயனாகிய மெய்யறிவைப் பெற்றோர் சாகப் பயப்படார்.
அரசன் எவ்வழி குடிகளு மவ்வழி
இகழி னிகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகன்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை. 44
44. If the prince speak contemptuously, they will speak so likewise; and if he praise, they will praise in equal terms, thus the world are led according to the taste of the warrior king. What else does the boat, that is borne along the current of the water?
(ப-உ) இறைமகன் ஒன்று இகழின் - அரசன் ஒன்றை இகழ்ந்தால்; (ஒக்க) இகழ்ந்து - (குடிகளும்) தாமும்கூட அதை இகழ்ந்து; புகழினும் ஒக்க புகழ்ப - (அரசன்) புகழ்ந்தால் தாமும் கூடப் புகழ்வர்; புணை நீர் வழிப்பட்ட - தெப்பம் நீர் செல்லும் வழி செல்லும்; மன்பதை இகல் மன்னன் சீர் வழிப்பட்டதே - (அதுபோல) மக்கட் கூட்டமும் வலிய அரசனின் சிறந்த வழியிலேயே செல்லும்; மற்று என் செயும் - (அவ்வாறு செய்வதைத் தவிர) வேறு என்ன செய்ய முடியும்?
(க-உ) அரசன் ஆணைப்படியே குடிகளும் நடக்க நேரிடும்.
நல் அமைச்சர் இயல்பு
செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு. 45
45. The keeper approaches the elephants when liquid flows from its temples in the season of frantic violence; and, as he perfects its discipline by repeated blows until its ear burns with pain, however enraged it be, flinches not in fear, but keeps the charge: such is every respect is the duty of the King’s minister.
(ப-உ) பாகு - (யானையைச் செலுத்தும்) பாகன்; எத்திறத்தும் கவிழ் மதத்த கைமா வயத்ததோ - எவ்வளவும் மதம் சொரியும் யானையை அடக்காது அதற்கு அடங்குவானோ? அடங்கான்; (அது போல்) அமைச்சு - மந்திரி; (எத்திறத்தும்) அம்மாண் பினவே - எவ்வகையிலும் அத் தன்மையரே ஆவர்; சென்று - (அரசன் நெறி தவறியவிடத்து அவனிடம்) போய்; செவி சுட இடித்து அறிவு மூட்டி - (அவனது) செவிகள் வருந்தும் படி இடித்துரைத்து அறிவு உண்டாகச் செய்து; வெகுளினும் வாய் வெரீஇ பேரா - கோபித்தாலும் (அவனுக்குப்) பயந்து நீங்கார். ‘ஆங்கு’ அசை.
(க-உ) அரசன் கோபித்தாலும் அவனை விட்டு நீங்காது அமைச்சர் அவனுக்கு நல்லறிவு புகட்டுவர்.
அரசனிடம் சமயமறிந்து பேசவேண்டும்
கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த
செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால்
எண்மைய னேனும் அரியன் பெரிதம்மா
கண்ணிலன் உள்வெயர்ப்பினான். 46
46. Utter not all you desire, without observing the proper season, in the belief that the king is under your influence; though occasionally he may be easy to manage; yet how difficult is he when destitute of mercy, and burning with inward rage?
(ப-உ) வேந்தன் நமக்கு கைவரும் என்று - அரசன் நமக்கு இணங்கி வருவான் என்று நினைத்து; செவ்வி தெரியாது காதலித்த உரையற்க - சமயம் தெரியாமல் (தாம்) விரும்பியதைச் சொல்லாதிருத்தல் வேண்டும்; ஒவ்வொருகால் எண்மையன் ஏனும் - சிற்சில சமயங்களில் (கேட்ட வற்றைப் பெறுதற்கு) எளியன்போல் தோன்றினாலும்; பெரிது அரியன் கண் இலன் உள் வெயர்ப்பினான் - அவன் (ஒன்றைக் கொடுத்தற்கும் காண்டற்கும்) மிக அரியன் இரக்கமில்லாதவன் உள்கோப முள்ளவன்.
(க-உ) அரசனிடம் சமயமறிந்து பேசி விரும்பியவற்றைக் கேட்டுப் பெறுதல் வேண்டும்.
அரசர் இயல்பு
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் - வெகுளின்மன்
காதன்மை யுண்டோ இறைமாண்டார்க் கேதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு. 47
47. They remember not old acquaintance; they regard not intimacy, they acknowledge not the ties of blood, or other connexion; what affection have princes in their rage? They know neither foes nor friends.
(ப-உ) வெகுளின் மன் - (அரசர்) மிகக் கோபித்தால்; பழமை கடைப்பிடியார் - பழைய பழக்கத்தைப் பற்றி நினையார்; கேண்மையும் பாரார் - நண்பர் என்பதையும் நோக்கார்; பிறிது - இவையல்லாமல்: கிழமை ஒன்றும் கொள்ளார் - இவர் நமக்கு உரியவர் என்பதைச் சிறிதும் நினையார்; இறை மாண்டார்க்கு காதன்மை உண்டோ - அரசியலில் ஆழ்ந்தவர்க்கு அன்பு என ஒன்று உண்டோ; அவர்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இலர் - அவர்களுக்கு அயலாரெனவும் சுற்றத்தாரெனவும் கிடையாது.
(க-உ) அரசர் கோபித்தால் அயலவர் சுற்றத்தவரென்றும் பாரார்.
அரசர் தலைவாயில் காத்தல்
மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள்
காத்தவை யெல்லாங் கடைமுடைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும். 48
48. Say not contemptuously, “What good have we seen in our fruitless attendance at the king’s gate?” The many long days that you have waited, will at last, in turn afford a hand, to raise you to dignity in the Royal Court.
(ப-உ) யாம் மன்னர் புறங்கடை வறிதே காத்தும் - நாம் அரசருடைய தலைவாயிலை வீணே காத்து வந்தோம்; எ நலம் காண்டும் என்று எள்ளற்க - எவ்வகையான பலனையும் பெற்றிலேம் என்று இகழ்ந்து (கவலைப் படா)திருத்தல் வேண்டும்; பல்நெடுநாள் காத்தவை எல்லாம் - மிக நீண்ட காலம் காத்தவை எல்லாம்; கடைமுறை போய் கை கொடுத்து - முடிவிற் சென்று உதவியாகி; வேந்து அவையின் மிக்கு செயும் - அரச சபையில் உயர்வைக் கொடுக்கும்.
(க-உ) அரச ஊழியத்தால் முடிவில் உயர்வு உண்டாகும்.
நல்ல கருமத்தை முயன்று செய்யவேண்டும்
உறுதி பயப்ப கடைபோகா வேனும்
இறுவரை காறும் முயல்ப - இறும்உயிர்க்கு
ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில. 49
49. Although you may not be certain of the event, persevere to the last in a good undertaking. It is not wrong to drop the medicine of life into the lips of dying men; for there are some things, which are possible, though they are like things that are not.
(ப-உ) உறுதி பயப்ப கடைபோகா ஏனும் - நல்ல காரியங்கள் முற்றுப் பெறுதல் நிச்சயமல்ல வாயினும்; இறுவரை காறும் முயல்ப - (அறிவுடை யோர்) அவை முடிவு அடையும் வரையும் முயற்சி செய்வர்; இறும் உயிர்க்கு ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்று - சாகும் தருணத்திலுள்ள உயிருக்கு உயிரை நீடிக்கத் தக்க மருந்தை வாயில் விடுதல் தீதல்ல; அல்லனபோல் ஆவனவும் சில உண்டு - தீமையாகவும் சில முடிவது உண்டு.
(க-உ) முடியாதெனத் தோன்றினாலும் நல்ல கருமத்தைக் கடைசிவரையும் முயன்று பார்க்க வேண்டும்.
ஊழை நம்பியிராது முயலவேண்டும்
முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறத்த வென்னார் - மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்
தேற்றார் எறிகால் முகத்து 50
50. The wise will not say, “Though exertion be laid aside, the decrees of fate cannot, on that account, fail”. However ignorant, none will set up a clear light, without any protection in a strong wind, in order to see the reality of destiny.
(ப-உ) முயலாது வைத்து - தாம் முயற்சி செய்யாமல் இருந்து; ஊழ் திறத்த - எல்லாம் ஊழ்வினையால் உண்டாகும் என்று; முயற்று இன்மை யால் உயல் ஆகா என்றார் - முயற்சி செய்யாமல் இருப்பதால் அவை தவறிப்போக மாட்டா என்று (அறிவுடையோர்) நினைத்துக் கொண்டிரார்; ஊற்றம் இல் தூ விளக்கம் - அசைவில்லாது எரியக்கூடிய நல்ல விளக்கை; ஊழ் உண்மை காண்டும் என்று - ஊழ்வினைஇருக்கும் தன்மையைக் காண்போமென்று; எறிகால் முகத்து மயலாயும் ஏற்றார் - வீசுகின்ற காற்றுக்கு எதிரே அறிவு கெட்டும் (எவரும்) கொளுத்தமாட்டார்.
(க-உ) எல்லாம் ஊழால் வரும் என்று நம்பியிராது முயற்சி செய்ய வேண்டும்.
ஊழை முயற்சியால் வெல்லலாம்
உலையா முயற்சி களைகணா வூழின்
வலிசிந்தும் வன்மையு முண்டே - உலகறியப்
பான்முளை தின்று மறலி உயிர்குடித்த
கான்முளையே சாலுங் கரி. 51
51. There is a power, which, with the aid of unyielding exertion, will destroy the strength of destiny. Of this, as is known to all the world, the child, who devoured the germ of fate, and drank the life of Yaman, is an evidence.
(ப-உ) உலையா முயற்சி களைகண் ஆக - அசைவில்லாத முயற்சியே துணையாக; ஊழின் வலி சிந்தும் வன்மையும் உண்டே (தீய) ஊழின் வலியைக் கெடுக்கும் வன்மையும் உள்ளதாகும்; பால் முளை தின்று மறலி உயிர் குடித்த கான்முளையே சாலும்கரி - ஊழ்வினையின் முளையைத் தின்று இயமனின் உயிரை உண்ட குழந்தையே (மார்க்கண்டேயரே) போதுமான எடுத்துக் காட்டாம்.
(க-உ) முயற்சியால் ஊழையும் வெல்லலாம்.
ஆய்வன ஆய்ந்து செய்க
கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை யாளப் படும். 52
52. With a knowledge of the proper time and place, and of the root and fruit of the undertaking; after due deliberation; and with a knowledge of the strength of existing resources; an enterprize may be accomplished.
(ப-உ) காலம் அறிந்து - (ஒரு கருமத்தைச் செய்தற்கேற்ற) காலத்தை அறிந்து; ஆங்கு இடம் அறிந்து - அப்பொழுதே (செய்தற்கேற்ற) இடத்தை யும் அறிந்து; செய்வினையின் மூலம் அறிந்து - செய்யுந் தொழிலின் பலத்தையும் (ஆழத்தை) அறிந்து; விளைவு அறிந்து - பெறும் பேற்றையும் அறிந்து; மேலும்தாம் சூழ்வன சூழ்ந்து - மேலும் தாம் ஆராய வேண்டி யவைகளை ஆராய்ந்து; துணைமை வலி தெரிந்து - தமக்குத் துணை நிற்பவரின் வலிமையையும் அறிந்து; ஆள்வினை ஆளப்படும் - பின்னர் தமது முயற்சியைச் செய்தல் வேண்டும்.
(க-உ) காலம் இடம் முதலியவைகளை ஆராய்ந்து கருமத்தைத் தொடங்கவேண்டும்.
கருமமே கண்ணாயினார்
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரரர் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார். 53
53. They regard not bodily pain; they consider not hunger; they indulge not their eyes in sleep; they esteem not the injury of any; they look not to the rarity of a seasonable opportunity; they care not for contempt; whose eye is fixed on their undertaking.
(ப-உ) கருமமே கண்ணாயினார் - (தமது) காரியத்தை முடிப்பதிலே கருத்தாயிருப்பவர்; மெய் வருத்தம் பாரார் - உடல் வருத்தத்தைப் பொருட்படுத்தார்; பசி நோக்கார் - பசியைக் கவனிக்க மாட்டார்; கண் துஞ்சார் - கண் உறங்கமாட்டார்; எவர் எவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் யார் என்ன தீமையைச் செய்தாலும் பொருட்பாடுத்த மாட்டார்; செவ்வி அருமையும் பாரார் - காலத்தின் அருமையையும் பார்க்க மாட்டார்; அவமதிப்பும் கொள்ளார் - பிறரின் அவமதிப்பையும் கருதமாட்டார்.
(க-உ) காரியத்தை முடிக்கும் கருத்துடையவர் எதையும் பொருட்படுத்தார்.
பகை சிறிதாயினும் கேடு விளையும்
சிறிய பகையெனினும் ஓம்புதல் தேற்றார்
பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத்
தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும்
யானை நிழல்காண் பரிது. 54
54. Those, who perceive not, that they ought to beware of even the weakest foe, are greatly in error; if a frog only leap into the deep water of the low pool, it is impossible to see the shadow of an elephant.
(ப-உ) பகை சிறிய எனினும் - (தமக்குள்ள) பகைகள் சிறியனவா யினும்; ஓம்புதல் தேற்றார் பிழைபாடுடையர் - (தம்மைப்) பாதுகாத்துக் கொள்ள அறியாதவர் பிழைபாடுடையவராவர்; நீர்நிறை ஆழ் கயத்து மடுவில் - நீர் நிறைந்த ஆழ்ந்த நீர்நிலையாகிய குளத்தில்; தவளை குதிப் பினும் யானை நிழல் காண்பு அரிது - தவளை குதித்தாலும் (நீர் கலங்கிப் போவதால்) யானையின் (பெரிய) நிழல்தானும் தெரியாது மறைந்துபோகும்.
(க-உ) பகை சிறிதாயினும் கேடு உண்டாகும்.
உட்பகை அஞ்சப்படும்
புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை. 55
55. Those, who fear not the attack of more than ten million avowed enemies, should beware of a single secret foe; the Sages, who bind the whole world by a single word, will guard, with unremitting caution, against the enemy, lust.
(ப-உ) புறப்பகை கோடியின் மிக்கு உறினும் அஞ்சார் - வெளிப்பகை கோடிக்கு மேலாக இருப்பினும் பயப்படாதவர்; அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்பர் - உட்பகை ஒன்றிருந்தாலும் (அதற்குப்) பயந்து காவல் செய்வர்; உலகு அனைத்தும் சொல் ஒன்றில் யாப்பார் - உலகம் முழுவதையும் ஒரு சொல்லால் கட்டவல்ல முனிவர்; பல்காலும் காமப்பகை புரிந்து ஓம்பிக் காப்ப - பலமுறையும் காமமாகிய உட்பகையை மிகவும் தடுத்துக் காவல் செய்வர்.
(க-உ) புறப் பகைவரினும் அகப்பகைவர் ஆஞ்சுதற்குரியர்.
வஞ்சகர் நட்பை விடவேண்டும்
புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும் - கழிபெரும்
கண்ணோட்டம் செய்யேல் கருவியிட் டாற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து. 56
56. After discovering the venomous enmity of those, who burn with inward hate, while they are externally friendly; instantly separate from them; treat them not with too much delicacy; they, who use the knife to cure a sore, will not close it over unhealed.
(ப-உ) புறம் நட்டு அகம் வேர்பார் நச்சு பகைமை வெளி இட்டு வேறாதல் வேண்டும் - வெளியே நட்புக்கொண்டு உள்ளே கோபித்திருப்ப வருடைய நஞ்சுபோன்ற பகையை வெளியாக்கி அவரைப் பிரிதல் வேண்டும்; கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் - (அவர்களிடத்தில்) மிகுந்த இரக்கங்கொள்ளுதலாகாது; புண் கருவி இட்டு ஆற்றுவார் - புண்ணைக் கத்தியால் அறுத்து ஆற்றுவார்; பொதிந்து மூடார் - அதனை மறைத்து மூடார்.
(க-உ) வெளியே நட்புக் காட்டி உள்ளே பகை உடையவருக்கு முகம் பார்த்தலாகாது (தாட்சணியங் காட்டலாகாது).
வஞ்சக நட்பு
நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமாம்
நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து 57
57. For those, who, meeting friendship with treachery, secretly devise evil, and array themselves on the side of enemies; surely the appointed day of power has expired; and Yaman must be lying carelessly forgetful of their iniquity.
(ப-உ) நட்பு இடை குய்யம் வைத்து - நண்பரிடத்து வஞ்சகம் வைத்து; எய்யா வினை சூழ்ந்து - (அவர்) அறியாதபடி தீங்கு செய்யச் சமயம் பார்த்து; வட்கார் திறத்தராய் நின்றார்க்கு - பகைவர் பக்கத்தவராய் நிற்பவருக்கு; திட்பம் ஆம் நாள் உலந்தது - நிச்சயமாய் (அவர்களின்) வலிய வாழ்நாள் முடிந்தது; நடுவன் நடுவுஇன்மை மறந்து வாளா கிடப்பன் - இயமன் (அவர்களின்) தீச்செயல்களை மறந்து சும்மாவா இருப்பான்? இரான் (இயமன் தண்டிப்பான் என்றவாறு).
(க-உ) நண்பர் போலிருந்து வஞ்சகம் செய்பவர் மறுமையில் நரக தண்டனை ஆடைவர்.
மனம் குற்றாமனால் எல்லாம் குற்றமாகத் தோன்றும்
மனத்த கறுப்பெனின் நல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தி னவர். 58
58. Where there is a stain on the heart, even good deeds will be all received as evil; but those of spotless minds, though men do them altogether evil, will still look upon it as good.
(ப-உ) மனத்த கறுப்பு எனின் - (ஒருவனுக்கு) மனத்தில் குற்றம் இருந்தால்; நல்ல செயினும் - (அவனுக்கு) நல்லவற்றைப் பிறர் செய்தாலும்; அனைத்து எவையும் தீயவே ஆகும் - அவை எல்லாம் தீயனவே யாகும்; மாசு இல் மனத்தினவர் - குற்றமில்லாத மனத்தினையுடையவர்க்கு; எனை துணையும் தீயவே செய்யினும் நல்லவா காண்பவே - எவ்வளவு தீயவற்றைச் செய்தாலும் அவர் அவற்றை நற்செய்கைகளாகவே கொள்வர்.
(க-உ) பிறர் நல்ல காரியங்களைத் தனக்குச் செய்தாலும் கெட்ட மனமுடையவன் அவற்றைத் தீமையாக கருதுவன்.
நல்லவர் கடுஞ்சொல்லும் இனியதாகும்
இனியவ ரென்சொலினும் இன்சொல்லே இன்னார்
கனியும் மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும்மெய்பொடிப்பச்
சிங்கி குளிர்ந்துங் கொலும். 59
59. Whatever those of kind disposition may say, will still be sweet; but even the honied words of the unkind will be gall. The kindling borax, though it burn, will assuage pain. Arsenic, though it causes the body to shiver with cold, will kill.
(ப-உ) இனியவர் என் சொலினும் இன் சொல்லே - நல்லவர் (கடிய) சொற்களைச் சொன்னாலும் இனிய சொல்லேயாகும்; இன்னார் கனியும் மொழியும் கடுவே - கெட்டவருடைய இனிய மொழியும் நஞ்சாகும்; அனல் கொளுந்தும் வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் - நெருப்புப் போல (எரிச்சலைக் கொடுக்கும்) வெங்காரம் எரிவுகொடுப்பதாயிருந்த போதும் நோயை ஆற்றும்; சிங்கி மெய் பொடிப்ப குளிர்ந்தும் கொலும் - நஞ்சு மயிர் சிலிர்க்கும்படி குளிர்ச்சியைக் கொடுத்துக் கொன்றுவிடும்.
(க-உ) நல்லவர் வெறுக்கத்தக்க சொற்களைச் சொன்னாலும் அவை இனியனவாகும்.
மனம் அழுக்கு அற்றிருத்தலே நல்ல ஒழுக்கம்
பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற்
புலமைந்துங் காத்து மனமா சகற்றும்
நலமன்றே நல்லா றெனல் 60
60. That virtue, which, by excluding these four, falsehood, slander, rude words, and unprofitable conversation; avoids offence in speech; and, by guarding the five organs of sense, keeps clear of the pollution of the heart; may indeed by termed the right way.
(ப-உ) பொய் குறளை வன்சொல் பயனில என்ற இந் நான்கும் எய்தாமை - பொய் புறங்கூறல் கடுஞ்சொல் பயனில்லாச் சொல் என்னும் இந்த நாலும் உண்டாகாமல்; சொல்லின் வழுகாத்து - சொற்களின் குற்றங்களை நீக்கி; மெய்யில் புலம் ஐந்தும் காத்து - உடம்பில் ஐம்புலன் களையும் அடக்கி; மனம் மாசு அகற்றும் நலம் அன்றே நல் ஆறு எனல் - மனத்தில் குற்றத்தைப் போக்கும் நற்செயலன்றோ நல்லவழி என்று சொல்லப்படுவது.
(க-உ) மனம் அழுக்கற்று ஐம்புலன்களையும் அடக்கியிருத்தலே நல்லவழி.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
நல்லா றொழுக்கின் றலைதின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய
செங்கட் புலியே றறப்பசித்துத் தின்னாவாம்
பைங்கட் புனத்தபைங் கூழ். 61
61. Those, who have persisted in the course of the path of virtue, though in poverty, will not consent to do evil: the spotted red-eyed tiger, though ravenous with hunger, will not feed on the growing crop in the green meadow.
(ப-உ) நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார் - நல்ல ஒழுக்க வழியில் சிறந்து ஒழுகுபவர்; நல்கூர்ந்தும் அல்லன செய்வதற்கு ஒருப்படார் - வறுமை யடைந்தவிடத்தும் தீயவற்றைச் செய்ய நினைக்க மாட்டார்; பல் பொறிய செங்கண் புலி ஏறு - பலவரிகளையும் சிவந்த கண்களையுமுடைய ஆண் புலி; அற பசித்தும் - மிகப் பசித்ததாயினும்; பைங்கண் புனத்த பைங் கூழ் தின்னாவாம் - பசிய கொல்லையிலுள்ள பசிய பயிரைத் தின்னாது.
(க-உ) வறுமை வந்தாலும் நல்லவர் தகாத செயல்களைச் செய்ய நினையார்.
ஒழுக்கத்தைப் பொருளுக்கு விற்றலாகாது
குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவும் - தவம்விற்றாங்
கூனோம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்திதல் தலை. 62
62. The riches gotten by selling the privileges of descent; the prosperity acquired by selling the benefit of truth; the ease that pampers the body at the expenses of religious duties; and the subsistence derived from selling the ties of friendship and kindred; to beware of all these is chief excellence.
(ப-உ) குலம் விற்று கொள்ளும் வெறுக்கையும் - ஒருவன் தனது குலத்தை விற்றுப் பெறும் செல்வமும்; வாய்மை நலம் விற்று கொள்ளும் திருவும் - மெய்யினால் வரும் நன்மையை விற்றுப் பெறும் செல்வமும்; தவம் விற்று ஊன் ஓம்பும் வாழ்வும்; விரதத்தைக் கைவிட்டுத் தனது உடலை வளர்க்கும் வாழ்க்கையும் - உரிமை விற்று உண்பதும் - நண்பர் உறவினர் முதலிய உரிமைகளைக் கைவிட்டு உண்டு வாழ்தலும்; தான் ஓம்பிக் காத்தல் தலை-தான் மிகவும் காத்தல் சிறந்த அறமாகும்.
(க-உ) குலம் மெய் தவம் முதலியவற்றையும் உறவினரையும் பொருளுக்காகக் கைவிடுதலாகாது.
தீயவழியில் வந்த பொருள் நில்லாது
இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தெளியார்
உடைமைகொண் டேமாப்பார் செல்வம் - மடநல்லார்
பொம்மன் முலைபோற் பருத்திடினும் மற்றவர்
நுண்ணிடைபோற் றேய்ந்து விடும். 63
63. The wealth of those, who exult in having gotten the possessions of the poor, by watching an opportunity to terrify and deceive them; though it increase like the swelling bosom of beautiful women, will quickly diminish like their slender waist.
(ப-உ) இடைதெரிந்து - சமயம் பார்த்து; அச்சுறுத்து - பயமுறுத்தல்; வஞ்சித்து - கபடஞ்செய்து; எளியார் உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் - எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து செருக்கடை பவருடைய செல்வம்; மடம் நல்லார் பொம்மன் முலைபோல் பருத்திடினும் - அழகிய பெண்களின் பெரிய தனங்கள் போல் (ஒருபோது) பெரிதா யிருந்தபோதிலும்; அவர் நுண்ணிடை போல் தேய்ந்துவிடும் - (அச் செல்வம்) அப்பெண்களின் மெல்லிய இடை போலக் குறைந்துபோம்.
(க-உ) ஏழைகளை வஞ்சித்துப் பெற்ற பொருள் விரைவில் அழிந்து போம்.
உள்ளத்தில் திருப்தி யடையாமை
பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க் காக்கம் அரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா. 64
64. How impossible is it for mortals to prosper, who, making little of what they have gotten, think much of what they have not; the wild fire, which devours everything as it comes, cannot but die away, as the fuel is consumed.
(ப-உ) பெற்ற சிறுக - தமக்குக் கிடைத்தவை (பொருள்) சிறிதாகத் தோன்ற; பெறாத பெரிது உள்ளும் சிற்றுயிர்க்கு - கிடையாதவற்றைப் பெரிது விரும்பும் சிறிய வாழ்நாளுடைய உயிர்களுக்கு; ஆக்கம் அரிது - மேலும் செல்வத்தால் வளர்ச்சியடைதல் அரிதாகும்; எரி தழல் வரவர வாய் மடுத்து - எரிகின்ற நெருப்புக் கிடைக்கக் கிடைக்க வாயிடத்தே கொண்டு; வல் விராய் முற்றும் மாய மாயாது இரா - வலிய விறகுகள் முற்றும் அழிய எரிகின்ற தழல் அழியாதிருக்கமாட்டாது.
(க-உ) கிடைத்ததோடு திருப்தி அடையாது பேராசை கொள்வோர் பெற்ற பொருளால் அனுபவிக்கும் பயனையும் இழப்பர்.
பிறர் பொருளை விரும்பாதவருக்குப் பொருள் சேரும்
தத்தம் நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - எய்த்தும்
அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடைய தாகும் பொருள். 65
65. To such as do not fail of what is due to their respective station and lineage; exert themselves in their proper calling; and though in difficulties, neither transgress the bounds of virtue, nor cover their neighbour’s wealth; riches will flow to their very gates.
(ப-உ) தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே - தத்தமக்குரிய தகுதிக்கும் குடிப் பிறப்புக்கும் தவறாது; ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - ஏற்ற முறையில் முயன்று; எய்த்தும் அறம் கடையில் செல்லார் - மறந்தும் பாவவழியில் செல்லாமல்; பிறன் பொருளும் வெஃகார் - பிறருடைய பொருளையும் ஆசைப்படாதவருடைய; புறங்கடையது ஆகும் பொருள் - தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து சேரும்.
(க-உ) பிறர் பொருளுக்கு ஆசைப்படாது நல்லவழியில் முயல்பவருக்குப் பொருள் எளிதிற் கிடைக்கும்.
உயர்ந்தவர் செல்வம் பலர்க்கும் பயன்படும்
பொதுமகளே போலும் தலையாயார் செல்வம்
குலமகளே ஏனையோர் செல்வம் - கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்
செல்வம் பயன்படுவ தில். 66
66. The wealth of the eminently generous, is like a prostitute; the wealth of the middling class is like a chaste married woman; but the wealth of misers, like the charms of unadorned widows, produces no benefit.
(ப-உ) தலையாயார் செல்வம் பொதுமகளே போலும் - தலைமையானவருடைய செல்வம் பொதுமகளிர் போல எல்லோருக்கும் பயன்படுவதாகும்; ஏனையோர் செல்வம் குலமகளே - இடையானோர் செல்வம் குலமகளைப்போலத் தன்னை யுடையவனுக்கே பயன்படுவ தாகும்; கடையாயார் செல்வம் கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம் போல் பயன்படுவது இல் - கீழ்மக்களின் செல்வம் ஆபரணங்களைக் களைந்த கைம்பெண்ணைப் போல யார்க்கும் பயன்படாது.
(க-உ) நல்லவரிடத்துள்ள பொருள் எல்லாருக்கும் பயன்படும்; கீழ் மக்களிடத்துள்ள பொருள் யார்க்கும் பயன்படாது.
கொடாதவன் செல்வத்திலும் வறுமையே நல்லது
வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான். 67
67. Even the poverty of the liberal is far better than a miser’s wealth; for the former is not gratuitously subject to the opporbrious reproaches of the world, as ungracious, selfish, and pitiless.
(ப-உ) வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் - கொடுக்கும் குணமில்லாதவனுடைய செல்வத்தைக் காட்டிலும்; மற்றையோன் நல்குரவே நனிநல்ல - ஈயும் குணமுடையவனின் வறுமையே மிகவும் நல்லது; (ஏனென்றால்); அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று பலரால் கொன்னே இகழப்படான் - இரக்கிமில்லாதவன் அன்பில்லாதவன், முகம் பாராதவன் என்று பலரால் வீணே இகழப்படமாட்டான்.
(க-உ) கொடுக்கும் குணமில்லாத செல்வரை உலகத்தவர் இழித்துக் கூறுவர்.
கொடுக்க இயலாவிடினும் இன்சொல் வேண்டும்
ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிதம்மா - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா விவரென்செய் வார். 68
68. It may be impossible to give; but how cruel is it to be at the same time poor of kind words; yet what else can they do; if, as by a smith, their tongues be pierced through, and their mouths locked up by the evil deeds of a former life?
(ப-உ) ஈகை அரிது எனினும்; கொடுத்தல் முடியாதாயினும்; இன்சொலினும் நல்கூர்தல் ஓஓ கொடிது கொடிது அம்மா - இனிய சொல் கூறுவதிலும் வறுமை அடைதல் ஐயோ மிகக் கொடியதாகும்; தீவினைக் கம்மியனால் நா கொன்று வாய்ப்பூட்டு இடப்படின் இவர் ஆ ஆ என் செய்வார் - தீவினை என்னும் கம்மாளனால் நாவைக் குத்தி வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருப்பதால் அவர்கள் வேறு என்ன செய்வார்கள்.
(க-உ) கொடுக்காவிடினும் இன்சொல் சொல்லவேண்டும்.
சொல் வன்மையைப் பயன்படுத்த வேண்டும்
சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம்
ஆக்கங் கெடுவ துளதெனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள் பவர். 69
69. Where a man’s words possess influence without cause to neglect to avail himself of it, is nothing else than to destroy the effect of good works; even when their wealth is threatened with immediate ruin, should those fear, who possess the advantages of eloquence?
(ப-உ) சொல்வன்மை உண்டு எனின் - ஒருவனுக்குத் தனது சொல்லுக்கு வலிமை உண்டானால்; கொன்னே விடுத்து ஒழிதல் நல்வினை கோறலின் வேறல்ல - (அதனைப் பயன்படுத்தாது) வீணே விட்டிருத்தல் நல்ல காரியங்களை அழித்தலின் வேறு ஆகமாட்டாது; வாக்கின் பயன்கொள்வார் வல்லை தம் ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ - சொல்லின் வலிமையால் பயனடைய வல்லவர் விரைவில் தமது பொருளெல்லாம் கெட்டுப் போவதாயிருந்தாலும் அதற்குப் பயந்து தமது சொல்வன்மையைப் பயன்படுத்தாது விடுவரோ?
(க-உ) சொல்வன்மையுடையவர் அதனைப் பயன்படுத்தி அதனாலாம் பயனை அடைதல் வேண்டும்.
பெரியோர் அறனல்லா வழியில் பொருளீட்டார்
சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்
பெறுமெனிற் றாழ்வரோ தாழார் - அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஓண்மையிற் றீர்ந்தொழுக லார். 70
70. When they can procure a great advantage by a little exertion, shall they shrink from it; who abandon what is contrary to virtue though it be easy, to pursue decidedly the path of duty, however difficult?
(ப-உ) அறன் அல்ல ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார் - தரும மல்லா வழியில் விலகிச்சென்று ஒழுகாதவர்; சிறு முயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப் பெறும் எனின் - சிறிய முயற்சியைச் செய்து பெரிய பயனை அடையக்கூடுமானால்; எண்மைய வாயினும் கைவிட்டு அரிது எனினும் தாழ்வரோ - செய்தற்கு எளிமையுடைய வாயினும் அறத்தைவிட்டுக் கடுமை யானவற்றைச் செய்யத் துணிவரோ? தாழார் - துணியார்.
(க-உ) சிறிய முயற்சியால் பெரிய பொருள் வருமாயினும் அறநெறியில் ஒழுகுவோர் அவற்றைச் செய்யத் துணியார்.
செய்ய முடியாததை செய்ய முடியுமெனக் கூறும் புன்மை
செய்யக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் றண்ணளிபோல்
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. 71
71. Of what avail is the flattering politeness of men, who forwardly profess that they will do things, which are not in their power to do? It may be fitly compared to the tender feelings of a man, who lest harsh words should grieve the heart of another, would cut off his head.
(ப-உ) செய கடவ அல்லனவும் செய்துமன் என்பார் - செய்யதற் கருமையுடை காரியங்களை மிகுதியும் செய்து முடிப்போம் என்று சொல்லி நிற்பவர்களது; நயத்தகு நாகரிகம் என்னாம் - விரும்பத்தக்க முகமன் பேச்சு என்ன பயனைச் செய்யும்; (இச்செயல் எதுபோலெனில்) செயிர்த்து உரைப்பின் நெஞ்சு நேரம் என்று - கோபித்துச் சொன்னால் மனம் வருந்துமென்று; தலை துமிப்பான் தண் அளிபோல் எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - தலையை வெட்டுபவனது கருணை போன்றதென்று விரித்துக் கூறத்தக்கதாகும்.
(க-உ) தான் செய்ய முடியாத கருமத்தைச் செய்ய முடியுமென்று சொல்பவரின் செயல் பயனற்றது.
வலியற்றவர் பயனற்றன செய்யினும் ஆரவாரிப்பர்
அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்
டொல்காதார் வாய்விட் டுலம்புப - வல்லார்
பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங்
கறிமடம் பூண்டுநிற்பா ரார். 72
72. Many, to reap a harvest of empty sound, scruple not to boast aloud, though they have done nothing; on the contrary, where are the men, who, when they have done a good action, assume feigned ignorance, as if others had done it?
(ப-உ) ஒல்லாதார் - வலியற்றவர்; அல்லன செய்யினும் ஆகுலம் கூழ் ஆ கொண்டு வாய் விட்டு உலம்பும் - பயனல்லாதவற்றைச் செய்தாலும் ஆரவாரத்தையே பயனாகக்கொண்டு வாய்விட்டு ஆரவாரஞ் செய்வர்; வல்லார் பிறர் - வலிய பிறர்; பிறர் செய்பபோல் செய்தக்க செய்து - பிறரால் செய்யப்படுவன போன்ற செய்யத்தக்க செயல்களைச் செய்து; ஆங்கு அறிமடம் பூண்டு நிற்பார் - அவ்விடத்தில் அறியாமையுடையவர்போல் அடக்கமாக இருப்பர்.
(க-உ) அரியவற்றைச் செய்ய மாட்டாதவர் அடக்கமின்றி ஆராவாரஞ் செய்திருப்பர்.
பிறர் பழியை எடுத்துத் தூற்றுவான் திறம்
பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போல்
கைவிதிர்த் தஞ்சப் படும். 73
73. A man who, without malice, takes up, and dwells upon the scandal of others, for the solitary advantage of exciting laughter, will be feared and trembled at, like a man, who, without any benefit to himself, would kill his neighbour by a blow on the cheek, that the might see the body quiver in death.
(ப-உ) பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி - ஒரு பகையும் இல்லாதிருக்கவும் பலருக்குள்ள வசைகளை எடுத்துத் தூற்றி; நகை ஒன்றே நல் பயனாக் கொள்வான் - நகையாடுதலையே நல்ல பயன் என்று கொள்பவன்; பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறு உடைத்துக் கொல்வான்போல் அஞ்சப்படும் - யாதும் பயனில்லாமல் உடம்பில் உண்டாகும் நடுக்கத்தைக் காணுதற் பொருட்டு பிறருடைய கன்னத்தை உடைப்பவனைப்போல அஞ்சத் தக்கவனாவான்.
(க-உ) பகையில்லாதிருக்கவும் பிறர் பழிகளே எடுத்துத் தூற்றி நகையாடுகின்றவனை அஞ்சுதல் வேண்டும்.
தெய்வம் நின்று ஒறுக்கும்
தெய்வ முளதென்பார் தீய செயப்புகின்
தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம்
இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே
பலகாலும் சொல்வார் பயன். 74
74. If those, who confess the existence of God, enter on an evil action, God will stay and rebuke them without mercy; not those, who say, “there is no God”. Is it not to their own dear children, that men patiently repeat instruction?
(ப-உ) தெய்வம் உளது என்பார் தீய செய புகின் - தெய்வம் உண்டு என்கின்றவர் தீய செயல்களைச் செய்யத் தொடங்கினால்; தெய்வமே கண் நின்று ஒறுக்கும்-அத்தெய்வமே கண்ணுக்கு முன்னால் நின்று தண்டிக்கும்; தெய்வம் இலது என்பார்க்கு இல்லை - தெய்வம் இல்லை என்று சொல்லு பவர்க்கு அவ்வாறு தெய்வம் தண்டிப்பதில்லை; இன் புதல்வர்க்கு அன்றே பலகாலும் பயன் சொல்வார் - தமது இனிய புதல்வர்களுக் கல்லவோ (பெற்றோர்) பயன்தரக்கூடிய புத்தமதிகளைச் சொல்லுவர்.
(க-உ) கடவுள் உண்டென்பவர் தீயவழியில் சென்றால் கடவுள் தண்டித்து அவரை நல்ல வழியில் செலுத்துவர்.
நல்வழியில் வராதபொருள் தீமை விளைக்கும்
தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல - தீயன
நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல். 75
75. Though the prosperity of those who do evil, increase; still evil is but evil; evil will never be good. Like the wild cow, which licks the body with her tongue, so as to create pleasing sensation, while at the same time she thereby causes death.
(ப-உ) தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் - கெட்ட காரியங் களைச் செய்பவரின் செல்வம் வளர்வதானாலும்; தீயன - தீய வழியில் வந்த அச்செல்வங்கள்; நா இன்புற நக்கி கொல்லும் கவயமாபோல் - நாவினால் இன்பம் தருமாறு நக்கிப் பின் கொல்கின்ற காட்டுப் பசுவைப் போல; தீயனவே வேறல்ல - தீயவையல்லாமல் வேறல்ல; தீயன நல்லன ஆகா - தீயவை நல்லவை ஆகமாட்டா.
(க-உ) தீய செயலால் வந்தபொருள் தீமையையே விளைக்கும்.
பழி நாணுவார் உயர்ந்தவராவர்
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் - முன்னைத்தம்
ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்
தீய செயினுஞ் சில. 76
76. Not inferior to those who walk every day in the right way, so as to gain the approbation of good men; are the men who though they may do some things wrong, are broken in spirit at the thought of the force of destiny, and with the shame of reproach.
(ப-உ) தம் முன்னை ஊழ்வலி உன்னி - தாம் முற்பிறப்பிற் செய்த தமது ஊழின் வலியால் (தீவினை செய்ய நேர்ந்ததை) நினைத்து; பழி நாணி உள்ளுடைவார் - (வரும்) பழிச் சொல்லுக்கு அஞ்சி மனம் வருந்துவோர்; சில தீய செயினும் - தீயவை சிலவற்றைச் செய்தாலும்; (அவர்கள்) நன்மக்கள் செம் நா தழும்பு இருக்க நாள்வாயும் செந்நெறி செய்வாரின் - நல்லோர் (பல முறையும் அவர் நன்மையை எடுத்துச் சொல்லுதலால்) நாத்தழும் பேறும்படி தினமும் நல்லொழுக்கத்தில் செல்பவரிலும் பார்க்க; கீழல்லர் - தாழ்ந்தவராகமாட்டார்.
(க-உ) தாம் செய்த குற்றத்துக்காக வருந்தும் இயல்பினர் நன்னெறியில் ஒழுகும் உயர்ந்தவருக்குத் தாழ்ந்தவராகமாட்டார்.
பிறன் மனை நயத்தல்
பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறனன்றே ஆயினு மாக - சிறுவரையும்
தன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். 77
77. To visit the gate of a neighbour’s wife is certainly not virtue. But suppose it to be so. Then if it yield even a brief enjoyment, be it allowed; but surely the torture, that shakes the body and the mind with agitation, is not enjoyment.
(ப-உ) பிறன் வரை நின்றாள் கடைத்தலை சேறல் - பிறனுடைய எல்லைக்குள் நிற்பவளாகிய ஒருவன் மனைவியின் தலைவாயி லிடத்துச் செல்லுதல்; அறன் அன்று - நல்ல ஒழுக்கமன்று; ஆயினும் ஆகுக - அப்படி நல்லது அல்லாவிடினும் ஆகுக; சிறு வரையும் நலத்தது ஆயின் கொள்க - சிறிதளவாயினும் இன்பம் தருவதாயின் அதனைக் கைக்கொள்க; நலம் அன்றே - ஆனால் அது இன்பந் தருவதன்று; மெய் நடுங்க மனம் நடுங்கும் நோய் - உடல் நடுங்க மனமும் நடுங்கத் துன்பந் தருவதாகும்.
(க-உ) பிறன் மனையாளை விரும்புதல் துன்பந் தருவதாகும்.
இன்பம் துய்த்தல்
கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்தல் நலம். 78
78. Without interruption to business; without ruining learning without preventing charity; and without greatly diminishing our household goods; the enjoyment of the charms of those who resemble a beautiful young branch, may be considered good.
(ப-உ) கருமம் சிதையாமே - தாம் செய்யும் காரியம் கெடாமலும்; கல்வி கெடாமே - படிப்புக் கெடாமலும்; தருமமும் தாழ்வு படாமே - தருமமும் குறைவு வராமல்; பெரிதும் தம் இல்நலமும் குன்றாமே - பெரிதும் தமது வீட்டு நன்மைகளும் கெடாமல்; ஏர் இள கொம்பு அன்னார் நல் நலம் துய்த்தல் தலை - அழகிய இளம் கொம்பினை யொத்த தம்மனைவியரின் நல்ல இன்பத்தை அனுபவித்தல் நல்லது.
(க-உ) தனது கடமைகளுக்குப் பங்கம் வராமல் மனைவியோடு சேர்ந்து இன்பம் நுகர்தல் வேண்டும்.
காமத்தின் செயல்
கொலையஞ்சாhர் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிதுற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார். 79
79. They fear not murder; they are not ashamed of falsehood; they preserve not reputation; they rob not in one way only, but in all; they think not of any act that it is sin attended with infamy; what else will they not do, who have fallen into the power of lust?
(ப-உ) காமம் கதுவப்பட்டார் - காமத்தால் கவரப்பட்டவர்; கொலை அஞ்சார் - கொலை செய்வதற்குப் பயப்படார்; பொய் நாணார் - பொய் சொல்ல வெட்கப்படார்; மானமும் ஓம்பார் - தமது மரியாதையையும் பாதுகாக்கமாட்டார்; களவு ஒன்றோ - களவுசெய்தல் ஒன்று மாத்திரமோ; ஏனையவும் செய்வார் - மேலும் பாவங்களையும் செய்வார்; இஃது பழியொடு பாவம் என்னார் - எந்தத் தீய செயலையும் பழியும் பாவமுமுடையது என்று நினையார்; பிறிது என் செய்யார் - வேறுயாது செய்யமாட்டார் (எல்லாப் பாவங்களும் செய்வர்)
(க-உ) காமத்தின் வசப்பட்டார் எல்லாப் பாவங்களையும் செய்ய அஞ்சமாட்டார்.
இனிப்பை விரும்பாது கைப்பை விரும்பு மியல்பு
திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும்
பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய
வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும்
தீய விலங்கின் சில. 80
80. There are some, who though their own wife he more beautiful than Lachmi; nevertheless degrade themselves by hankering after their neighbour’s; like an evil beast, which though it has sweet food in its mouth, will reject it to feed on bitter.
(ப-உ) மனைக்கிழத்தி திருவினும் நல்லாள் எனினும் - மனைவி திருமகளிலும் அழகுடையவளாயிருந்தாலும்; நறுவிய வாயின ஏனும் உமிழ்ந்து - இனிய பொருள் வாயிலிருந்தனவாயினும் அவற்றைக் கக்கிவிட்டு; கடு தின்னும் தீய விலங்கின் சிலர் - கைப்புள்ள பொருளைத் தின்னும் கெட்ட விலங்குபோன்ற சிலர்; பிறர் மனைக்கே பீடு அழிந்து நிற்பர் - பிறருடைய மனையாளின் சேர்க்கைக்கே தமது பெருமை கெட்டு நிற்பர்.
(க-உ) தீயவர் தமது மனைவியர் அழகுடையவராயிருப்பினும் பிற பெண்களையே விரும்புவர்.
மக்கட்பேறே சிறந்த பேறு
கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே
றென்பதோ ராக்கமும் உண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு. 81
81. If a wife clothed with chastity, crowned with affection, anointed with modesty, and adorned with the jewels of a good heart and life, possess only the wealth of child**earing; what more can her husband have to seek by the performance of penance?
(ப-உ) கற்பு உடுத்து - கற்பாகிய ஆடையை உடுத்து; அன்பு முடித்து - அன்பாகிய பூவைச் சூடி; மெய் நாண் பூசி - உடம்பில் நறுமணமாகிய சாந்தைப் பூசி; நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு - நற்குணம் நற்செய்கைகளை ஆபரணமாக அணிந்தவளுக்கு; மக்கள் பேறு என்பதோர் செல்வம் உண்டாயின் - பிள்ளைகளைப் பெற்றிருத்தல் என்னும் செல்வம் உண்டானால்; கொண்டாற்கு செய் தவம் வேறு இல் - கணவனுக்கு வேறு செய்ய வேண்டிய தவம் ஒன்றுமில்லை.
(க-உ) நற்குண நற்செய்கையுள்ள மனைவிக்குப் பிள்ளைப் பேறு இருத்தல் சிறப்பு.
மாதர் மனம்
ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலான்மேல் ஆகும் மனம். 82
82. Though their husband be of surpassing beauty, youthful, powerful in song, of an aspect to ravish the eyes of maidens, and uniting truth with courtesy in his pleasing address; the heart of women will still be fixed on others.
(ப-உ) கேள் ஏந்து எழில் மிக்கான் - கணவன் சிறந்த அழகில் உயர்ந்தவன்; இளையான் - இளமைப்பருவமுடையவன்; இசைவல்லான் - இராகம் பாடுவதில் வல்லவன்; காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - பெண்களின் கண்களைக் கவரும் தோற்றத்தவன்; வாய்ந்த நயன் உடை இன் சொல்லான் எனினும் - பொருத்தமான மெல்லிய இனிய சொல்லைப் பேசுகின்றவன் ஆனாலும்; மாதர்க்கு மனம் அயலார் மேல் ஆகும் - பெண்களுக்கு மனம் அயலவர்மேல் செல்லும்.
(க-உ) கணவன் அழகு நற்குணம் முதலியவற்றால் சிறப்புடையவனா யிருப்பினும் கற்பில்லாத மகளிரின் மனம் அயல் ஆடவர் மேற் செல்லும்.
கற்பில் மகளிர்
கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொள்ளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தங்
கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர்
யாவர்க்கும் கேடுசூ ழார். 83
83. Far better than a wife without chasity, are the fair, with golden bracelets, who subsist by selling their favours; for they do not involve in misery their husband, their neighbour, themselves and all their connexions.
(ப-உ) நலம் விற்று உணவு கொள்ளும் பொன்தொடி நல்லார் - தமது இன்பத்தைப் பிறருக்கு விற்று உணவு கொள்கின்ற பொன்வளை அணிந்த பெண்கள்; கற்பில் மகளிரின் நனி நல்லர் - கற்பில்லாத பெண்களிலும் பார்க்க மிக நல்லவராவர்; தம் கேள்வர்க்கும் - (முன்கூறப்பட்ட விலைமாதர்) தமது காதலருக்கும்; ஏதிலர்க்கும் - அயலவர்க்கும்; தங்கட்கும் - தங்களுக்கும்; தம் இளைஞர் யாவர்க்கும் கேடு சூழார் - தமது உறவினர் எவருக்கும் கேடுசெய்ய நினையார்.
(க-உ) கற்பில்லா மகளிரினும் பொது மகளிர் நல்லர்.
கற்பில் மகளிர் பிறப்பு
முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு. 84
84. Regardless of their duty, of their birth and of propriety; insensible to shame, and respectability; what good quality is there compatible with the folly of frail women? The birth of such is the retribution for grievous sin.
(ப-உ) முறையும் - தமக்கும் மற்றவர்களுக்குமுள்ள உறவு முறைகளையும்; குடிமையும் - பிறர் குடியின் தன்மையையும்; பான்மையும் நோக்கார் - தமக்கும் பிறர்க்குமுள்ள தகுதியையும் பாரார்; நிறையும் நாணும் பேணார் - மன உறுதிப்பாட்டையும் நாணத்தையும் பாதுகாக்கமாட்டார்; பேதைமைக்கு பிறிதும் ஒரு பெற்றிமை உண்டே - அறியாமை கொண்ட பெண்களுக்கு இவையல்லாமல் வேறு குணங்களுமுண்டோ? கற்பு இல் மகளிர் பிறப்பு பெரும் பாவம் - கற்பில்லாத பெண்களின் பிறப்புப் பெரிய பாவமாகும்.
(க-உ) கற்பில்லாத பெண்களிடத்தில் நல்ல குணங்கள் எவையும் காணப்படமாட்டா.
துறவிகள் பெண்களைப் பாரார்
பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார்
கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகை யினார். 85
85. They, who admire not female beauty; who dwell not in conversation on their names; who excite not the eye and heart with licentious gazes; who indulge not the ear in music and song, and commend not what is contrary to decency, are the men who wage successful war with the unrestrained general organs.
(ப-உ) வீடு இல் புலம் பகையினார் - அடக்கமுடியாத ஐம்புலன் களுக்குப் பகைவராயுள்ள (ஐம்புலன்களை அடக்கிய) துறவிகள்; பெண்மை வியவார் - பெண்களின் நல்ல தன்மைகளைப் புகழார்; பெயரும் எடுத்து ஓதார் - பெண்கள் என்ற பெயரைத் தானும் எடுத்துச் சொல்லார்; நெஞ்சு உறைப்ப கண்ணொடு நோக்கு உறார் - நெஞ்சில் அவர்களின் எண்ணம் படியும் படி கண்ணாலும் பாரார்; பண்ணொடு பாடல் செவி மடார் - இசையோடு பாடப்படும் பாடல்களையும் (செவிகொடுத்துக்) கேளார்; பண்பு அல்ல பாராட்டார் - நல்ல தன்மைகளல்லாத பிறவற்றை யும் பாராட்டமாட்டார்.
(க-உ) துறவிகள் பெண்களைப் பார்க்க மாட்டார்; மற்றும் புலன்களைக் குழப்பும் செயல்களில் ஈடுபடமாட்டார்.
துறவிகள் உண்டி சுருக்குவர்
துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம்
அயிற்சுவையி னாகுவவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துண்ணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர். 86
86. They, who, deeming indulgence in the sweets of sleep and the enjoyment of the charms of women of unsullied beauty, to be encouraged by indulgence in the sweets of feasting, take their food abstemiously as an idiot, are possessed of a strength which none may prevail against.
(ப-உ) பிறர் சிலர் போல் மொத்துணா மொய்ப்பினவர் - (துறவிக ளல்லரான) சிலரைப் போல (ஐம்புலன்களால்) அடிபடாத வலியையுடைய துறவிகள்; துயில் சுவையும் - நித்திரை இன்பமும், தூநல்லார் தோள் சுவையும் எல்லாம் - அழகிய பெண்களின் தோள்களைச் சேரும் சுகமும் ஆகிய எல்லாம்; அயில் சுவையில் ஆகுவ என்று எண்ணி - உணவுச் சுகத்தினால் உண்டாகின்றவை என்று நினைத்து; அயில் சுவையும் பித்து உணாகொள்ப போல் கொள்ப - உணவுச் சுகத்தையும் பைத்தியக்காரன் உணவு கொள்வது போல் கொள்வர்.
(க-உ) உணவு மிகுதலால் மற்ற இன்பங்களில் விருப்பமுண்டாகு மென்று நினைந்து துறவியர் அற்ப உணவு கொள்வர்.
துறவிகள் உடம்பைக் கவனியார்
அன்போ டருளுடைய ரேனும் உயிர்நிலைமற்
றென்பியக்கங் கண்டும் புறந்தரார் - புன்புலாற்
பொய்க்குடில் ஓம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த
புக்கில் குடிபுகுது வார். 87
87. Holy men, though of tender and benevolent disposition, do not turn back, though their bones show through the skin; should they who possess a heavenly mansion, which they have built for themselves by wisdom, seek to preserve a false tabernacle of rankly decaying flesh?
(ப-உ) போதத்தால் தாம் வேய்ந்த புக்கில் குடிபுகுதுவார் - மெய்அறிவினால் தாம் அமைத்த வீட்டு உலகில் செல்லும் துறவிகள்; புன் புலால் பொய் குடில் ஓம்புவரோ - இழிந்த ஊன் மூடிய குடிசையைப் பாதுகாப்பரோ; அன்போடு அருள் உடையர் ஏனும் - அவர்கள் அன்பும் இரக்கமும் உடையவர்களானாலும்; உயிர் நிலை என்பு இயக்கங் கண்டும் புறந்தரார் - உயிர்க்கு இருப்பிடமான உடம்பு (மெலிந்து) எலும்பு அசையக் கண்டாலும்; புறந்தரார் - அதற்கு இளைக்கமாட்டார்.
(க-உ) வீட்டு இன்பத்தை வேண்டுபவர் உடம்பைப் பேணுவதிற் கவலை கொள்ளார்.
மற்றின்பம் வேண்டுவார் சிற்றின்பம் விரும்பார்
சிற்றின்பஞ் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில் 88
88. Small as is sensual pleasure, its votaries renounce all other enjoyments; shall they who bathe in the great sea of heavenly delight, sink in the mire of earthly indulgence?
(ப-உ) சிற்றின்பம் சில் நீரது ஆயினும் - சிற்றின்பம் சிறு பொழுதைய இன்பமாயினும்; அஃது உற்றார் - அவ்வின்பத்தைப் பெற்றவர்; மற்றின்பம் யாவையும் கைவிடுப - மற்ற எல்லா இன்பங்களையும் விட்டு விடுவர்; முற்றும் பேரின்பமா கடல் ஆடுவார் தாம் - முற்றாக (எப்போதும்) பேரின்ப மாகிய பெரிய கடலில் மூழ்குகின்றவர்; பார் இன்ப பாழ் கும்பியில் வீழ்பவோ - உலக இன்பமாகிய கொடிய நரகில் விழுவரோ.
(க-உ) பேரின்பத்தில் மூழ்குகின்றவர் உலக இன்பங்களை விரும்பார்.
பெண் சேர்க்கை தவிர்த்தல்
எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின்
தெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை
காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும்
தூர்த்தருந் தூர்ப்பார் அவர். 89
89. Whatever be the conduct of those, who profess to have renounced the world, if they be only chaste, even their enemies will raise to them their hands in adoration. If however distinguished in other respects, they guard not this virute, even the profligate will not pass them ever uncensured.
(ப-உ) எவ்வினையரேனும் - (துறவிகள்) வேறு எவ்வகையான செயலைச் செய்பவராயிருந்தாலும்; இணை விழைச்சு ஒன்று இல் எனில் - பெண் சேர்க்கை என்னும் ஒன்று இல்லாதவராயின்; தெவ்வும் திசை நோக்கி கை தொழும் - (அவர்) பகைவரும் அவரிருக்கும் திசையைப் பார்த்துக் கை யெடுத்து வணங்குவர்; அவ்வினை காத்தல் இலரேல் - (பெண் சேர்க்கை இல்லாமை என்னும்) அந்தச் செயலைக் காத்துக் கொள்ளல் இல்லாதவ ரானால்; எனைத்துணையர் ஆயினும் - அவர்கள் வேறு எவ்வளவு சிறந்த வர்களாயிருந்த போதிலும்; தூர்த்தரும் அவர் தூர்ப்பார் - கெட்டவர்களும் அவர் மீது பழி கூறுவர்.
(க-உ) பெண் சேர்க்கையை விரும்பாதிருத்தலே துறவிகளுக்குச் சிறப்பு.
நற்செயல்களில் காலத்தைக் கழித்தல் வேண்டும்
பரபரப்பி னோடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான்
நல்லாற்றின் ஊங்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர். 90
90. There are some, who doing various things with bustling haste, will spend day and night in watering the wilderness; but if by any means, one turn them into the good way, they will be immediately startled with alarm. How shall such prosper?
(ப-உ) பலபல பரபரப்பினோடு செய்து இரவு பகல் பாழுக்கு இறைப்ப - (பலர்) பலவற்றை இரவுபகலாக விரைந்து செய்து காலத்தை வீணே கழிப்பர்; ஒரு ஆற்றான் - ஒரு வகையால்; நல்ஆற்றில் ஊக்கின் மெய்பதறி குலை குலைப - நல்ல வழியில் செலுத்தினால் உடல் நடுங்கிப் பதறுவர்; இவர் எவ்வாற்றான் உய்வார் - இவர்கள் எவ்வழியில் தழைப்பார்கள்.
(க-உ) காலத்தை வீண் செயல்களிற் கழிக்காது நற்செயலில் போக்க வேண்டும்.
இளமையில் தவம் செய்க
இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே - விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும்
தாழாமே நோற்பார் தவம். 91
91. To sleep away our days in careless indolence, saying, “We are young, and may perform the duties of devotion in old age,” might be right, if we could see the limit of our lives; but those, who could do so, whould not relax in the performance of religious duties.
(ப-உ) விளிவு இன்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் - (இளமையில்) மரணம் இல்லாதிருப்பதாகிய எல்லையை அறிந்திருப்பா ராயின்; இளையம் - நாம் (இப்போது) இளமைப் பருவத்தினோம்; முது தவம் நோற்று ஆற்றுதும் என்று - முதுமைப் பருவத்தில் வருந்தித் தவத்தைச் செய்வோம் என்று நினைத்து; உளைவு இன்று கண்பாடும் ஊழே - வருத்தமில்லாது கண்ணுறங்கியிருப்பதும் முறைமையாகும்; காண்பாரும் - (தமது வாழ்நாளின்) எல்லையை அறியக் கூடியவரும்; தாழாமே தவம் நோற்பார் - காலம் போக்காமல் தவத்தைச் செய்வர்.
(க-உ) மரணம் எப்போது வருமென்று யாருமறியாராதலின் விரைந்து தவஞ் செய்தல் வேண்டும்.
தீய ஊழால் நல்லனவும் தீயவாம்
நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றின் கொண்டுய்க்கும் - எல்லி
வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல். 92
92. Though a man may begin to do good, his evil destiny, without suffering it, will turn it into evil: as those who live by plundering on the highway, lead astray the traveller in the dark night.
(ப-உ) நல்லன செய்யத் தொடங்கினும் ? நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கினாலும்; அல்லன - தீய வினைப்பயன்; நோனாமே அல்லவற்றில் கொண்டு உய்க்கும் - அதில் தரிக்க விடாது அதனையும் தீய செயலாக்கி விடும்; எல்லி ஆறு அலைத்து உண்பார் - இரவிலே வழிப்பறி செய்து உண்பவர்; வியன் நெறி செல்வாரை - பெரிய வழியிடத்தே செல்வோரை; செலவு பிழைத்து உய்ப்ப போல் - வழி தப்பச் செய்வது போலாகும்.
தீய ஊழ் உள்ளவர் நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கினாலும் அவை தீய காரியங்களாக முடியும்.
பொய் வேடத்தாற் பயனில்லை
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்(று)
இப்புலமுங் காவா திது. 93
93. The cloak of devotion worn by those who have renounced the world externally, is some what different from a garment; for a garment though it guards not the other organs of senses, yet guards the body-the other guards not even this.
(ப-உ) நெஞ்சு புறம்பு ஆ துறந்தார் தவப் போர்வை - நெஞ்சில் துறவாது வேடத்தில் துறந்தவரது தவ வேடம்; கஞ்சுகம் அன்று பிறிது ஒன்றே - அது சட்டை போன்றதன்று வேறொன்றாகும்; கஞ்சுகம் எப் புலமும் காவாமே மெய் புலம் காக்கும் - சட்டை எல்லாப் புலன்களையும் காவாவிட்டாலும் உடம்பாகிய புலனைக் காக்கும்; இது இப்புலமும் காவாது - இத்தவவேடம் இந்தப்புலனையும் காக்கமாட்டாது.
(க-உ) மனதில் துறவாதவனின் தவவேடம் பயனற்றது.
வஞ்சித்து ஒழுகுதல்
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு. 94
94. Ye fools, who live in the practice of deceit, exult not in the thought that you have succeeded in deceiving all. That is true wisdom, which will tremble at the awful thought, that there is one everywhere present, who will behold all deceit.
(ப-உ) வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் - (பிறரைக்) கபடஞ் செய்து வாழும் அறிவில்லாதவர்களே; யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - எல்லாரையும் வஞ்சித்தோம் என்று சொல்லி மகிழாதீர்கள்; வஞ்சித்த - நீவிர் வஞ்சனை செய்ததை; எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு - எங்கும் நிறைந்தவனாகிய இறைவன் காண்பான் எனப்பயந்து உடல் நடுங்குவது அறிவு ஆகும்.
(க-உ) எங்கும் நிறைந்த கடவுள் எல்லாச் செயல்களையும் அறிவாராதலின் பிறரை வஞ்சித்தோமென்று மகிழவேண்டாம்.
மறைத்துச் செய்யினும் பழி வெளிப்படும்
மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்கும் - கழிமுடைப்
புன்புலால் நாற்றம் புறம்பொதிந்து மூடினுஞ்
சென்றுதைக்கும் சேயார் முகத்து. 95
95. The infamy of evil done in secret, will spread abroad as though God had proclaimed it to the beat of drum. Though the rank stench of putrid flesh be concealed and covered up, it will escape to penetrate the senses of far distant persons.
(ப-உ) மறை வழிப்பட்ட பழிமொழி - மறைவிற் செய்யப்பட்ட பழிச் செயலைப் பற்றிய (பழி) மொழி; தெய்வம் பறை அறைந்து ஆங்கு ஓடிப் பரக்கும் - தெய்வம் பறை அடித்துப் பரப்பியது போல அப்பொழுதே விரைந்து பரவும்; புல் புலால் கழிமுடை நாற்றம் - இழிந்த இறைச்சியின் மிகக் கெட்ட நாற்றம்; புறம் பொதிந்து மூடினும் சேயார் முகத்து சென்று தைக்கும் - மேலே பொதிந்து மூடி வைத்தாலும் தூரத்திலுள்ளவர் முகத்தில் சென்று தாக்கும்.
(க-உ) மறைவிற் செய்யப்படும் பழிச் செயல்கள் விரைவில் வெளிவந்துவிடும்.
வலியாற் கெட்டால் உய்யார்
மெலியாற் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார்மற் றொன்றானும் உய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற. 96
96. The weak, though they fall, will by some means survive; but the powerful survive not by any means; light things do not fall from their place with a loud crash; but if they should fall, they would be saved; not so the others.
(ப-உ) மெலியார் வீழினும் ஒரு ஆற்றான் உய்ப - சிறியவர் நிலைதப்பி விழுந்தாலும் ஒருவாறு பிழைப்பர்; வலியார் மற்று ஒன்றேனும் உய்யார் - (வலியவர் நிலைதப்பி விழுந்தால்) வேறு எந்த வகையிலும் பிழைக்க மாட்டார்; நொய்ய நிலைதப்பி சழக்கென்று வீழாவாம் - பாரமில்லாத பொருள் நிலை தவறி விரைவில் விழமாட்டா; வீழினும் உய்யும் - விழுந்தாலும் பிழைக்கும்; பிற உய்யா -(பாரமான) பிறபொருள்கள் பிழைக்கமாட்டா.
சிறுமையும் பெருமையும் செல்வம் அதிகாரம் போன்றவைகளைக் குறிக்கும்.
(க.உ)சிறியோர் நிலை தப்பிக் கீழ்நிலை அடையினும் பிழைப்பர்: மேலோர் நிலை தவறிக் கீழ் நிலை அடைந்தால் உய்யமாட்டார்.
பெரியர் சிறியர் செய்கைகள்
இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசு வேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர். 97
97. The conduct of the exalted is not to be reprehended like that of others, although it may not appear praiseworthy. For, are those, who after sacrificing a cow, and cherishing the sacred fire, behold the ways of heaven, to be likened to those who eat flesh to pamper their bodies?
(ப-உ) மேலையோர் செய்கை இசையாத போலினும் - பெரியோரின் செய்கைகள் பொருத்தமில்லாதவை போலக் காணப்பட்டாலும்; மற்றையோர்க்கு அல்லால் வசையாகா -(அவர் போலல்லாத) சிறியோர்க்கு அல்லாது வசையாகமாட்டாது; பசு வேட்டு தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே - பசுவைப் பலி கொடுத்து தீயை வளர்த்து வானுலக இயல்புகள் காண்பவரை ஒப்பவராவர்; ஊன் ஓம்பி ஊன் தின்பவர் - உடம்பைப் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தின்பவர்.
வான் வழக்கங் காண்பார் என்பதற்கு - மழை பெய்யச் செய்வார் என்றும் பொருள் கூறலாம். இவ்வாசிரியர் உயிர்களைக் கொன்று வேள்வி செய்தல் குற்றத்தின்பாற்படாதென நம்பியிருந்தார். இக் கருத்து எல்லாருக்கும் உடன்பாடன்று.
(க-உ) பெரியார் செயல்களும் சிறியார் செயல்களும் சில சமயங்களில் ஒத்தனபோற் காணப்படினும் அவைகளின் நோக்கங்கள் வெவ்வேறன.
பெரியார் தன்மை
எவரெவ ரெத்திறத்தர் அத்திறத்த ராய்நின்
றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலும் நிற்ப தென. 98
98. Our spiritual preceptors, who adapt themselves to the disposition of each, whatever it be, and give to everyone suitable counsel, will stand beyond all others, as their Lord is everywhere present.
(ப-உ) எம் உடையார் - எம்மை ஆளுகின்ற பெரியவர்; தம் உடையான் எப்பாலும் நிற்பது என - தம்மை ஆளுகின்ற கடவுள் எல்லார் தன்மைகளுக்குமேற்ப இருப்பதுபோல; எவர் எவர் எத்திறத்தர் அத்திறத்தர் ஆய் நின்று அவர் அவர்க்கு ஆவன கூறி-யார் யார் எத்தன்மையராயிருந்த போதிலும் அவ்வத்தன்மைக்கேற்ப நின்று ஆகவேண்டியவற்றைக் கூறி; உப்பாலாய் நிற்ப - எல்லார்க்கும் மேலாக நிற்பர்.
(க-உ) பெரியோர் மற்றவர்கள் தன்மைக்கேற்ப அவரவர்க்காவன கூறித்தாம் மேலாக நிற்பர்.
மெய்யுணர்ந்தார் செயல்
மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற்புலம் போக்கார் மெய்யுணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார்
காப்பே நிலையாப் பழி நாணல் நீள்கதவாச்
சேர்ப்பர் நிறைத்தாழ் செறித்து. 99
99. They who know the truth, indulge not their senses in the pursuit of lies, and have in view the acquisition of true knowledge; will join to the door post of caution, the long door of the shame of sin, and will secure it with the bolt of steadfastness.
(ப-உ) மெய் உணர்ந்தார் - உண்மைப்பொருள்களை உணர்ந்தவர்; பொய் மேல் புலம் போக்கார் - பொய்யான பொருள்கள் மீது புலன்களைச் செலுத்தார்; மெய் உணர்ச்சி கைவருதல் கண்ணாபுலம் காப்பார் - மெய் அறிவு உண்டாதல் கருத்தாகப் புலன்களை அடக்குவார்; மெய்யுணர்ந்தார் காப்பே நிலைஆ - மெய்யுணர்ந் தவர்களது (புலன்களைக் காக்கும்) காப்பே நிலையாகவும்; பழி நாணல் ஏ நீள் கதவா - பழிக்கு நாணும் குணத்தை நீண்ட கதவாகவும்; நிறை தாழ் செறித்துசேர்ப்பர் - நிறைந்த குணமாகிய தாழ்ப்பாளை இறுகப்போடுவர்.
(க-உ) உண்மைப் பொருள்களை அறிந்தவர் புலன்களை ஒடுக்குவர்.
துறவிகளின் இன்பம்
கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன் போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே இன்பம்
இறந்தவெல்லாம் துன்பமலா தில். 100
100. As the first born son presented by a virtuous wife, to a husband, who has attained the shore of the sea of knowledge, is the bliss which appears in the contemplation of truth to those who have entirely renounced the world: compared to which all, that is past is but pain.
(ப-உ) கற்று துறைபோய காதலற்கு - கற்கவேண்டியவற்றைக் கற்று முடித்த கணவனுக்கு; கற்பினாள் பெற்று கொடுத்த தலைமகன் போல் - கற்புள்ள மனைவி பெற்றுக் கொடுத்த முதல்மகனைப் போல்; முற்ற துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் - முற்றாகத் துறவடைந்தவர்க்கு உண்மை அறிவினால் தோன்றுவதே இன்பமாகும்; இறந்த எல்லாம் துன்பம் அலாது இல் - அஃது அல்லாத மற்றவை எல்லாம் துன்பம் அல்லாமல் வேறு இல்லை.
(க-உ) துறவிகளுக்கு மெய்யுணர்வே இன்பம் அளிக்கும்.
வீட்டுவகை அடைப்பவர்
கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச் சென்றார். 101
101. They, who have studied and attained knowledge; have exercised self-control; have rejected evil and embraced good; have contented their desires with what they have obtained; and thus by laying hold on their object, have superseded the necessity of works; and employ their thoughts in the contemplation of the one object only, walk in the endless path of happiness.
(ப-உ) கற்று ஆங்கு அறிந்து - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைப் பொருளை அறிந்து; அடங்கி - அடக்கமாயிருந்து; தீது ஓரீஇ - தீமையை நீக்கி; நன்று ஆற்றி - நல்ல காரியங்களைச் செய்து; பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்தவற்றைக் கொண்டு மனம் நிறை வடைந்து; பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடையவேண்டிய நெறி களைக் கைக்கொண்டு; பணி அறம் நின்று - விதிக்கப்பட்ட அற வழிகளில் நின்று; ஒன்று உணர்ந்து - கடவுளை அறிந்து; நிற்பாரே நீள் நெறிச் சென்றார் - நிற்கின்றவரே வீட்டு நெறியில் நிற்கின்றவராவர்.
(க-உ) நூல்களைக் கற்று அதன்படி ஒழுகிக் கடவுளை அறிந்தவர் வீட்டு உலகை அடைபவராவர்.
ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவோர் - தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள். 102
102. The vision of those, who having measured without doubt and error, and ascertained all things by reason, sleep to external things that the eye of true knowledge may be awake, which looks within themselves, and substitutes spiritual, for material subjects, is the final and perfect attainment.
(ப-உ) ஐயம் திரிபு இன்று அளந்து - சந்தேகமும் மாறுபாடும் இல்லாமல் ஞாயத்தினால் அளந்து; உத்தியில் தெளிந்து - மனதில் தெளிந்து; மெய் உணர்ச்சி கண் விழிப்ப தூங்குவோர் - மெய்யறிவாகிய கண் விழித் திருக்க வெளிக்கருமங்களில் தூக்கம் கொண்டிருப்பவர்; தம் உள்ளே காண் பதே காட்சி - தமது மனதில் காண்பதே காட்சியாகும்; கனவு நனவாக பூண்பதே தீர்ந்த பொருள் - (ஞானமாகிய நித்திரையில் காணும்) கனவை விழிப்பு நிலையிலும் கண்டு நிற்றலே முடிந்த முடிவான பொருளாகும்.